சென்னை சத்தியமூர்த்தி பவனில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கடந்த சில நாட்களுக்கு முன் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது குறித்து தமிழ்நாடு குற்றப்புலனாய்வு காவல்துறையினர் (சிபிசிஐடி) விசாரணை நடத்தினர்.
சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம் உத்தரவின் பேரில் கண்காணிப்பாளர் ராதிகா, கூடுதல் துணை கண்காணிப்பாளர் முகமது ஷாஜகான், ஆய்வாளர் முத்துக்குமார் உட்பட 9 அதிகாரிகள் கொண்ட குழு இன்றுகாலை சத்திய மூர்த்தி பவனுக்கு வந்தனர்.
தாக்குதலின்போது காயம் அடைந்தவர்கள் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு உள்ளிட்டோரிடம் இக்குழுவினர் விசாரணை நடத்தினர்.
சிபிசிஐடி-யினர் வந்தபோது, காங்கிரஸ் தொடக்கநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்ததால், விழா முடிந்ததும் விசாரணை நடத்துமாறு காங்கிரஸ் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து சிபிசிஐடியினர் சிறிது நேரம் காத்திருந்து விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.