முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவேகவுடா, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதாவை இன்று சந்தித்தார். 3-வது அணி அமைப்பது குறித்து ஜெயலலிதாவுடன் அவர் விரிவாக ஆலோசனை செய்தார்.
மக்களவை தேர்தலின் போது அ.இ.அ.தி.மு.க. உடன் கூட்டணி வைத்துக் கொள்வதாக இந்திய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன. இதைத் தொடர்ந்து அக்கட்சித் தலைவர்கள் அண்மையில் ஜெயலலிதாவை சந்தித்து ஆலோசனை செய்தனர்.
மத்தியில் 3வது அணி அமைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இடதுசாரிகள், தெலுங்கு தேசம், பகுஜன் சமாஜ் கட்சி மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து 3-வது அணி அமைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதாவை முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவகவுடா ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று மாலை சந்தித்தார். பின்னர் மத்தியில் 3-வது அணி அமைக்க எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அவருடன் விரிவாக ஆலோசனை செய்தார்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தேவேகவுடா, மத்தியில் 3-வது அணி அமைக்க தயாராக உள்ள மற்ற கட்சித் தலைவர்களுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.
இந்த பேச்சுவார்த்தை புதுடெல்லியிலோ அல்லது சென்னையிலோ நடக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவியும், உத்தரப் பிரதேச மாநில முதல்வருமான மாயாவதி 3-வது அணியின் தலைவராக முன்னிறுத்தப்படுவார் என்று கூறப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.
இதற்குப் பதில் அளித்த தேவேகவுடா, "எங்கள் சந்திப்பின் போது இது குறித்து நாங்கள் எதுவும் ஆலோசனை செய்யவில்லை" என்றார்.
பின்னர் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த ஜெயலலிதா, மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டது என்று குற்றம்சாற்றினார். இதனால் 3-வது அணி அமைக்கும் சூழல் எழுந்துள்ளது என்றும் கூறினார்.
பயங்கரவாதம் போன்ற அபாயகரமான நடவடிக்கைகளை திறமையாக கையாள நமக்கு மத்தியில் வலுவான ஆட்சி தேவை என்ற ஜெயலலிதா, மத்தியில் வலுவான ஆட்சியைக் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றும் கூறினார்.
தேவேகவுடா உடன் நடந்த இந்த சந்திப்பு குறித்து பதில் அளித்த அவர், தற்போதைய அரசியல் நிலைமை உள்பட, குறிப்பாக எதிர்வரும் மக்களவைத் தேர்தல் குறித்து விரிவாக ஆலோசனை செய்ததாகவும் ஜெயலலிதா தெரிவித்தார்.