திருமங்கலம் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலவாழ்வுத் துறை அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலவாழ்வுத் துறை அமைச்சராக இருப்பவர் கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன். இவர் திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் லதா அதியமானை ஆதரித்துப் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு திடீரென லேசாக நெஞ்சுவலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.
தற்போது அவரது நிலைமை சீராக இருப்பதாகவும், இருதய நோய் மருத்துவர்கள் குழு அவரைத் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.