புதுச்சேரி மாநிலம் காரைக்கால் வந்த இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் பெரேரா தங்கியிருந்த அறையை முற்றுகையிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 45 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிறிலங்க மீன்வளத்துறை அமைச்சர் பெரேரா, வேளாங்கன்னி மாதா கோயிலில் தரிசனம் செய்வதற்காக குடும்பத்தினர் 10 பேருடன் காரைக்கால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்தார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு திரும்பிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், காரைக்காலில் சிறிலங்க அமைச்சர் இருப்பதை அறிந்து அங்கு சென்றனர்.
அப்போது, அவர் தங்கியிருந்த அறையை முற்றுகையிட்டு சிறிலங்க அரசை கண்டித்தும், ராணுவத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். தகவல் அறிந்து காவல்துறையினர் விரைந்து வந்து அவர்களை கைது செய்தனர்.