அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தின் மூலம் இயங்கும் பேருந்துகளை பிற போக்குவரத்துக் கழகங்களுக்குக் கொடுப்பதை உடனடியாக தமிழக அரசு கைவிட வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. பொது செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தொலைதூரப் பயணம் செய்யும் மக்களுக்காக 1980ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் திருவள்ளூவர் போக்குவரத்துக் கழகம் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் அரசு விரைவு போக்குவரத்துக் கழகமாக மாற்றப்பட்ட இப்போக்குவரத்துக் கழகம் 5 மாநிலங்களில் 20 பணிமனைகளையும், 920 பேருந்துகளையும், 8,000 தொழிலாளர்களையும் கொண்டு செயல்பட்டு வருகிறது.
அண்மையில் நடைபெற்ற அனைத்து போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர்கள் கூட்டத்தில் , மேற்படி தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 450 கிலோ மீட்டருக்குள் இயங்கும் பேருந்துகளை மற்ற போக்குவரத்துக் கழகங்களுடன் இணைக்க முடிவு செய்துள்ளதாகவும், அதன்படி மேற்படி கழகத்தில் 384 பேருந்துகள் மற்றும் வழித்தடங்கள் பிற போக்குவரத்துக் கழகங்களுக்கு அளிக்கப்பட இருப்பதாகவும், இதன் விளைவாக 2,500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கட்டாய இடமாற்றம் செய்யப்பட இருப்பதாகவும் விரைவு போக்குவரத்துக் கழகத்தைச்சேர்ந்த தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
விரைவு போக்குவரத்துக் கழகத்தின் தலையாய நோக்கமே குறித்த நேரத்தில், குறிப்பிட்ட இடத்தை அடைவதுதான். இப்போது விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளை பிற போக்குவரத்துக் கழகங்களுக்கு ஒப்படைத்தால், மேற்படி நோக்கம் செயலற்றதாகிவிடும்.
இதன் விளைவாக நாளடைவில் பயணிகள் அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் செய்யாமல், தனியார் பேருந்துகளிலும், ரயில்களிலும் செல்லத் தொடங்கி விடுவார்கள். இதனால் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு பெருத்த வருவாய் இழப்பு ஏற்படும்.
இதுமட்டும் அல்லாமல், தொழிலாளர்கள் இடமாற்றம் செய்யப்படாமல், அவர்களது வயதான பெற்றோர்களும், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியராக உள்ள அவர்களது குழந்தைகளும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
அதேபோல், போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணிக் கொடை வழங்கும்போது பின் தேதியிட்ட காசோலைகள் வழங்கப்படுவதாகவும், ஓய்வு பெற்ற பிறகு ஓர் ஆண்டிற்கு மேலாகியும் வருங்கால வைப்பு நிதி வழங்கப்படுவதில்லை என்றும், திமுக அரசு பொறுப்பேற்றது முதல் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய சேமநல நிதி மற்றும் கிராஜுவிட்டி, கம்யுடேஷன் ஆகியவை ஓர் ஆண்டுக்கு மேலாகியும் இன்னும் தரப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
தொழிலாளர்களுக்கு சரண்டர் விடுப்பு பணம் வழங்கப்படுவதில்லை என்றும், வருங்கால வைப்பு நிதியில் இருந்து எந்தவிதமான கடனும் பெற முடிவதில்லை என்றும், பணியில் இருக்கும்போது இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்படுவதில்லை என்றும் பல்வேறு புகார்களை தொழிலாளர்கள் தரப்பில் இருந்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
தொழிலாளர்களின் நலனை முன்னிட்டும், போக்குவரத்துக் கழகங்களின் சிறந்த செயல்பாட்டிற்காகவும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் மூலம் இயங்கும் பேருந்துகளை பிற போக்குவரத்துக் கழகங்களுக்குக் கொடுப்பதை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், தொழிலாளர்களை கட்டாய இடமாறுதல் செய்யக் கூடாது என்றும், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சலுகைகள் மற்றும் ஓய்வு கால சலுகைகள் உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும் என்றும், முதலமைச்சர் கருணாநிதியை தொழிலாளர்களின் சார்பிலும், தமிழக மக்களின் சார்பிலும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.