10வது முறையாக தி.மு.க. தலைவரானார் கருணாநிதி; பொருளாளரானார் மு.க.ஸ்டாலின்
, சனி, 27 டிசம்பர் 2008 (11:38 IST)
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் 10வது முறையாக கட்சித் தலைவராக முதலமைச்சர் கருணாநிதியும், பொதுச் செயலராக அன்பழகனும், பொருளாளராக மு.க.ஸ்டாலினும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தி.மு.க.வில் 13-வது முறையாக உட்கட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. அதிலிருந்து பொதுக் குழுவுக்கு உறுப்பினர்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழுவின் கூட்டம், சென்னையில் கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலாயத்தில் இன்று (27ஆம் தேதி) காலை நடைபெற்றது.
தி.மு.க தலைவராக கருணாநிதியின் பெயரும், பொதுச் செயலராக க.அன்பழகன் பெயரும், பொருளாளராக மு.க.ஸ்டாலினின் பெயரும் முன்மொழியப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளும் இந்த மூன்று பேரின் பெயரை முன்மொழிந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் முறைப்படி அறிவிக்கப்பட்டது. முதல்வரும், தி.மு.க.வின் தற்போதைய தலைவருமான கருணாநிதி, 10-வது முறையாக மீண்டும் தலைவராகவும், 8வது முறையாக பொதுச் செயலராக க.அன்பழகனும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
.
கட்சியின் துணை பொதுச் செயலராக இருந்த உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி முதன்மைச் செயலாளராகவும், துணை பொதுச் செயலராக துரைமுருகன், பரிதிஇளம் வழுதி, சற்குணபாண்டியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து கருணாநிதி, அன்பழகன், மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு ஆளுயர மாலைகள் அணிவிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதிக்கும், அமைச்சர் அன்பழகனுக்கும், மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி ஆசி பெற்றார்.
பின்னர் மத்திய- மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தி.மு.க முன்னணியினர், இயக்குநர் பாக்யராஜ், போட்டி ம.தி.மு.க அவைத் தலைவர் எல்.கணேசன் உள்ளிட்டோர் கருணாநிதி, அன்பழகன், மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அமைச்சர் கோ.சி.மணி ஆகியோர் காலில் விழுந்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின்.