தமிழீழ தேசிய இனத்தின் இறையாண்மையை தமிழர் மீண்டும் பெற தமிழீழ மக்களுக்கு அதன்வழி நிலையான, உறுதியான அமைதி வாழ்வு கிடைக்க, இந்திய அரசும், உலக நாடுகளின் அரசுகளும் தமிழீழ விடுதலைக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை தொடக்க விழாவும், தமிழீழ அங்கீகார மாநாடும் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார்.
இந்த மாநாட்டில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, கவிஞர் காசி ஆனந்தன், திராவிட இயக்க தமிழக பேரவை பொதுச் செயலளர் சுப.வீரபாண்டியன், நடிகர் மன்சூர்அலிகான் உள்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒற்றை தீர்மானத்தை திருமாவளவன் வாசித்தார். அந்த தீர்மானம் விவரம்:
1948ஆம் ஆண்டு பிரிட்டிஷ்காரர்கள் தமிழீழத்தை விட்டு வெளியேறுகிறபோது தமிழீழத்தின் இறையாண்மை தமிழீழ மக்கள் கையில் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த இறையாண்மை இலங்கை தீவில் பெரும்பான்மையினராக இருந்த சிங்களர் கையில் ஒப்படைக்கப்பட்டது. தமிழீழத்தின் இறையாண்மை சிங்களவரிடம் இருந்து தமிழர் கையில் ஒப்படைக்க வேண்டும்.
தமிழீழ தேசிய இனத்தின் இறையாண்மையை தமிழர் மீண்டும் பெற தமிழீழ மக்களுக்கு அதன்வழி நிலையான, உறுதியான அமைதி வாழ்வு கிடைக்க, இந்திய அரசும், உலக நாடுகளின் அரசுகளும் தமிழீழ விடுதலைக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து திருமாவளவன் பேசுகையில், ''டெல்லியின் பார்வையை ஈர்க்கவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது. சத்தியமூர்த்தி பவனை நாங்கள் தாக்கியதாக கூறுவது திட்டமிட்ட சதிச் செயல். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிட்டு வெற்றி பெறும் என்றார்.
இலங்கை ஒரு தீவு, அது இரு நாடுகளுக்கு சொந்தமானது. 1976இல் பட்டுக்கோட்டையில் நடந்த மாநாட்டில் தனித் தமிழ் ஈழம் வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை வலியுறுத்தித்தான் நாங்கள் இந்த கூட்டத்தை கூட்டியுள்ளோம் என்று திருமாவளவன் தெரிவித்தார்.
இலங்கை அரசு இதுவரை ஒன்றரை லட்சம் தமிழ் மக்களை படுகொலை செய்துள்ளது. 10 லட்சம் மக்கள் அயல்நாடுகளில் அகதிகளாக வாழ்கின்றனர். இலங்கைக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே போடப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் இலங்கை அரசு கிழித்து எறிந்து விட்டது. இலங்கை அரசு தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறது. தமிழ் ஈழம் தனி நாடு என்பதை இந்திய அரசும் உலக நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.