பண்ணாரி அம்மன் கல்லூரி முதல்வருக்கு தேசிய விருது
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி
பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி முதல்வருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வருபவர் டாக்டர் ஏ.சண்முகம். இவர் கடந்த சில ஆண்டிற்கு முன் இந்தியாவின் சிறந்த பொறியியல் கல்லூரியின் முதல்வர் விருதை பெற்றார். இதன் தொடர்ச்சியாக தற்போது பொறியியல் புதுமைமிகு ஆய்வுகளுக்கான தேசிய விருது பெற்றுள்ளார்.
பேராசிரியர் கே.ஆறுமுகம் தேசிய விருது என்ற பெயரில் வழங்கப்படும் இந்த விருதை இந்திய தொழில்நுட்ப கல்வி சங்கம் வழங்குகிறது. பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் டாக்டர் ஏ.சண்முகத்திற்கு "அகல அலைவரிசை கணினி வலையமைவுகள் மற்றும் தந்தியில்லா வலையமைவுகள் ' என்ற பாடப்பிரிவில் புதுமையான ஆய்வுகளை மேற்கொண்டதற்கு இந்த விருது கிடைத்துள்ளது.
இந்த விருதினை ஒரிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஷ்வரில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது. விருது பெற்ற முதல்வர் ஏ.சண்முகத்தை பண்ணாரி அம்மன் குழுமங்களின் தலைவர் டாக்டர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம், கல்லூரியின் இயக்குனர் டாக்டர் எஸ்.கே.சுந்தரராமன், கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.