கடந்த 21ஆம் தேதி ஏற்பட்ட வதந்தியால் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட்டு கொள்ளாத பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சொட்டு மருந்தை போட்டுக் கொள்ளும்படி தமிழக சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இன்று முதல் மூன்று நாள்கள் சொட்டு மருந்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த 21 ஆம் தேதி குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. அப்போது, போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகள் இறந்து போவதாக தமிழகம் முழுவதும் வதந்தி பரவியது.
இந்த வதந்தியால் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்காமல் பெற்றோர்கள் மருத்துவமனையில் இருந்து திரும்பிச் சென்றனர்.
இதையடுத்து தமிழக அரசு, வதந்தியை நம்ப வேண்டாம் என்றும், குழந்தைகளுக்கு ஆபத்து இல்லை என்றும் பொதுமக்களுக்கு தெரிவித்தது.
மேலும் வதந்தி பரவிய இடங்களில் எல்லாம் காவல்துறையினர், வாகனங்களில் சென்று மைக்கில் பிரசாரம் செய்தனர். போலியோ சொட்டு மருந்தால் குழந்தைகளுக்கு ஆபத்தில்லை என்றும் வதந்திகளை நம்பாதீர்கள் என்றும், வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரசாரம் செய்தனர்.
இந்த நிலையில் தமிழக அரசு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்றும் சொட்டு மருந்து போட்டுக் கொள்ளாத பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு போட்டுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், போலியோ சொட்டு மருந்தை போடவில்லை என்றால் குழந்தைகளுக்கு பல பாதிப்புகள் ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.