திருமங்கலம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக மக்கள் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து வரும் 27ஆம் தேதி முதல் ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகே பிரசாரம் செய்கிறார் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், திருமங்கலம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக மக்கள் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் க.முத்துராமலிங்கத்தின் வெற்றிக்கு பாடுபடும் ம.தி.மு.க. களப்பணிகளின் ஒருங்கிணைப்பாளராக கட்சியின் துணை பொது செயலாளர் துரை.பாலகிருஷ்ணன் செயல்படுவார்.
கட்சியின் பொது செயலாளர் வைகோ, திருமங்கலம் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரம் டிசம்பர் 27 முதல் ஜனவரி 6ஆம் தேதி வரை நடைபெறும்.
கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத்தின் பிரசாரம் 25, 26, 27, 28 மற்றும் 29 ஆகிய 5 நாட்கள் கிராமம், கிராமமாக நடைபெறும். தேர்தல் பிரசாரத்தின்போது கட்சியின் இளைஞர் அணி செயலாளர் க.அழகுசுந்தரம் கலந்து கொள்வார்.
தொகுதி முழுவதும் நெல்லை அபுபக்கர் இசைக்குழு மற்றும் ஒரத்தநாடு கணேஷ்-கோபு இசைக்குழு பிரசாரம் டிசம்பர் 27 முதல் நடைபெறும்.
திருமங்கலம் சட்டமன்ற இடைத்தேர்தல் பணி குறித்து மதுரை மாவட்ட பொறுப்பு குழு தலைவர் வீர.தமிழ்செல்வனுடன் கட்சி தொண்டர்கள் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.