செங்கல்பட்டு அருகே ஷேர் ஆட்டோ மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் ரயில்வே ஊழியர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் முருகன். ஷேர் ஆட்டோ டிரைவரான இவர் இன்று காலை பி.வி.களத்தூரில் இருந்து செங்கல்பட்டுக்கு ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றார்.
செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே சென்றபோது, சென்னை தாம்பரத்தில் இருந்து திண்டிவனம் சென்ற அரசு பேருந்து ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த ரயில்வே ஊழியர் விஜயன், பாபு, மற்றும் ஷேர் ஆட்டோவை ஓட்டி வந்த முருகன் உள்பட 3 பேரும் அதே இடத்தில் உடல் நசுங்கி பலியானார்கள்.
மேலும் சீனிவாசன், விஜயகுமார், கைலாசம், டேவிட்ரவி ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.