ஆஸ்ட்ரேலியாவில் வேலை வாங்கி தருவதாக அழைத்துச் சென்று மலேசியாவில் தவிக்கவிடப்பட்டு தமிழகம் திரும்பிய 21 இளைஞர்களுக்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.10,000 வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மற்றும் கடலூரைச் சேர்ந்த 21 இளைஞர்கள் தனியார் ஒருவரிடம் பணம் கொடுத்து, அவரால் ஏழு மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா நாட்டிற்கு வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, இடையிலேயே மலேசியாவில் இறக்கி விடப்பட்ட நிலையில் வேலையில்லாமல் பணத்தையும் இழந்து தவித்தனர்.
தமிழக அரசின் முயற்சியால் மீட்கப்பட்டு தாயகம் திரும்பிய அவர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் முதல்வர் கருணாநிதியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அத்துடன் ஏழு மாதங்களாக சிரமப்பட்டு பணத்தையும் இழந்து செய்வதறியாது நிலையில் உள்ள தங்களுக்கு சொந்த ஊருக்கு செல்ல உதவிபுரியுமாறு முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.
அவர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து அந்த 21 இளைஞர்களுக்கும் தலா ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.