பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அழிக்க வேண்டும் என்றும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு திறமையான அரசாக இருந்தால் தாக்குதல் நடத்துவோம் என பேசிக்கொண்டிருக்காமல் அதனை செய்து காட்ட வேண்டும் என்றும் பா.ஜ.க. மாநில தலைவர் இல. கணேசன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு எதை செய்தாலும் மக்கள் நன்மைக்காக செய்வதில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வெகுவாக குறைந்த பின்னரும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களிடம் வாக்குகளை பெறவேண்டும் என்பதற்காக சிறிய அளவு விலையை குறைத்து மக்களை ஏமாற்றுகிறது" என்று குற்றம்சாற்றினார்.
இனிமேல் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பதற்கு முன்புதான் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக மத்திய அரசு மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் என்றும் அவர் கூறினார்.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அழிக்க வேண்டும் என்பது பொது விவாதத்திற்கு உட்பட்ட விஷயம் அலல என்று கூறிய அவர், மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு திறமையான அரசாக இருந்தால் தாக்குதல் நடத்துவோம் என பேசிக்கொண்டிருக்காமல் அதனை செய்து காட்ட வேண்டும் என்றார்.
திருமங்கலம் இடைத்தேர்தல் குறித்துப் பேசிய அவர், அங்கு பா.ஜ.க யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து வரும் 28ஆம் தேதி நடைபெறும் மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று இல.கணேசன் தெரிவித்தார்.