பழனி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்வேந்தன் வீடு முன்பு மர்ம கும்பல் காங்கிரஸ் கொடிகளை எரித்து, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளது.
பழனி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி. யாக இருப்பவர் எஸ்.கே. கார்வேந்தன். இவரது வீடு தாராபுரத்தில் உள்ள மேற்கு கச்சேரி தெருவில் உள்ளது.
இன்று காலை அவரது வீட்டு வாசலில் பாதி எரிந்த நிலையில் 2 காங்கிரஸ் கொடியும், அதன் அருகில் ஒரு துண்டு பிரசுரமும் கிடந்தது.
அதில் "சட்டப்பேரவையில் 50 ஆண்டு பொன்விழா கண்ட கருணாநிதிக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறாய். சோனியாவுக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும் என்று கேட்காமல் கருணாநிதிக்கு விருது வழங்குமாறு கேட்டிருக்கிறாய். நீ எவ்வளவு தான் பாதுகாப்புடன் இருந்தாலும் இனி நீதான் எங்களது முதல் குறி" என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
கார்வேந்தன் டெல்லியில் உள்ளதால் இதுகுறித்து அவரது உதவியாளர் தாராபுரம் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
இதையடுத்து கார்வேந்தன் வீட்டுக்கு விரைந்த காவல்துறையினர் பாதி எரிந்த நிலையில் கிடந்த கொடி, துண்டு பிரசுரத்தை கைப்பற்றியதுடன், கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார்வேந்தன் எம்.பி. வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.