Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 2 March 2025
webdunia

திருமங்கலம் இடை‌த்தே‌ர்த‌‌லி‌ல் வாகை சூடுவோ‌ம் : கருணாநிதி

Advertiesment
திருமங்கலம் இடை‌த்தே‌ர்த‌‌லி‌ல் வாகை சூடுவோ‌ம் : கருணாநிதி
, வியாழன், 25 டிசம்பர் 2008 (11:32 IST)
2006இல் ஆட்சி பொறுப்பேற்றதற்குப் பின்னர் வந்த இடைத்தேர்தல்கள் இரண்டிலும் ‌தி.மு.க. வ‌ெ‌ற்‌றி பெ‌ற்றது போல ‌திரும‌ங்கல‌ம் இடைத்தேர்தலிலும் வாகை சூடுவோ‌ம் எ‌ன்று முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொடர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெயரளவில் மட்டும் ஜனநாயக இயக்கமாக இல்லாமல்; ஜனநாயகத்துக்கு நெருக்கடி ஏற்பட்ட அவசர காலத்தில் கூட; இந்தியாவிலேயே சுதந்திரக்காற்றை சுவாசிக்கக் கூடிய இடமாக இப்போது தி.மு.க. ஆட்சி நடக்கிற தமிழ்நாடுதான் இருக்கிறது என்று தோழர் ஈ.எம்.எஸ்.நம்பூதிரி பாட்டால் அனுபவரீதியாக சுட்டிக்காட்டப்பட்ட தி.மு.க.வின் தலைவனாக நான் இருப்பதிலும்; இந்த இயக்கத்தின் ஒரு கோடிக்கு மேற்பட்ட உறுப்பினர்களில் ஒருவனாகவோ; ஒருவராகவோ; நீ இருப்பதிலும் நமக்குத்தான் எத்துனை பெருமை! எத்துனை பெருமிதம்!

1949ஆம் ஆண்டு இந்த கழகம் தொடங்கப் பெற்று, ஓரிரு ஆண்டுகள் கடந்து மதுரையில் அய்யாசாமி, ரஜமான் என்ற 2 நண்பர்கள்; மதுரையில் ஒரு அமைப்பின் மீது கழகத்தின் பொதுச் செயலாளர் அண்ணா எடுத்த நடவடிக்கையைக் குறை கூறி பொதுக்குழுவில் குற்றஞ்சாட்டி, அதை விசாரிக்கவேண்டும் என்று முறையிட்டார்கள். உடனே அண்ணா எழுந்து என்ன செய்தார் தெரியுமா!

"இருநண்பர்களும் என்மீதே குற்றம் சாட்டுவதால் இதை நானே விசாரித்து முடிவு கூறுவது ஜனநாயகமல்ல; எனவே, இந்த விசாரணைக்கு நண்பர் ஏ.வி.பி.ஆசைத்தம்பி தலைமையேற்று நடத்தி முடிவு கூறட்டும்; என்றுரைத்து ஆசைத்தம்பியை நாற்காலியில் அமரச் செய்து, அண்ணா கீழே இறங்கி பொதுக்குழு உறுப்பினர்களுடன் அமர்ந்து கொண்டார். ஆசைத்தம்பி, அய்யாசாமி, ரஜமான் இருவரிடமும் விசாரணை செய்து, அவர்கள் சாற்றிய குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை என்றும், அண்ணா மீது வீண்பழி சுமத்தப்படுகிறதென்றும் தீர்ப்பு வழங்கினார்.

அதன்பிறகே அண்ணா பொதுச் செயலாளர் பொறுப்பில் அமர்ந்து, பொதுக்குழுக் கூட்டம் நடைபெறத் துணை நின்றார்'' அப்படி உட்கட்சி ஜனநாயகத்தையே பத்தரைமாற்றுத் தங்கமாகப் பாவித்து, பயிற்சி பெற்று; அந்த பயிற்சியை கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கிய, மக்களாட்சி தத்துவத்தின் மாமேதை அண்ணாவின் நிழல் தொடர்ந்து நடந்து; கொள்கை கோட்பாடுகளில் நிலைப்பெற்று நிற்பவர்கள் நாம், நம்மை கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் நிலையில் வளர்த்த காஞ்சித்தலைவருக்கும், அவரை கண்டெடுத்து கண்ணின் மணியாக தந்த தந்தை பெரியாருக்கும், அவர்கள் இருவரும் உருவாக்கிய இயக்கத்திற்கும் இணைத்து முப்பெரும் விழா எடுப்பவர்கள்; இந்த ஆண்டு அண்ணனின் நூற்றாண்டுவிழாவை சென்னையிலும், திருச்சியிலும், கோவையிலும் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தோம்.

"அடுத்து கொண்டாடும் இடமாக குமரி மாவட்டத்தை தேர்வு செய்துள்ளோம். அங்கேதானே கழக ஆட்சிக்காலத்தில் விவேகானந்தர் மண்டபம் உருவாயிற்று; நமது அரசின் உதவிகளோடு! அங்கேதானே காந்தி நினைவு மண்டபமும் உள்ளது! அங்கேதானே பெருந்தலைவர் காமராஜருக்கு கடற்கரை ஓரத்தில் நினைவு மாளிகை அமைத்துள்ளோம்! அங்கேதானே விண்முட்டும் அளவுக்கு அய்யன் வள்ளுவர் சிலை அமைத்துள்ளோம், இன்னும் ஓரிரு திங்களில் அதாவது பிப்ரவரி திங்களில் அங்கேதான் அண்ணா நூற்றாண்டுவிழா நடத்த திட்டமிட்டுள்ளோம்!''

அப்பப்பா! குலைந்தது கட்சி! தொலைந்தது இனிமேல்! சீந்துவார் யாருமின்றி! சீராட்டும் பாராட்டும் பெறாமல், "சீ'' என்றிகழப்பட்டு தெருவிலே சேர்க்கப்பட்டுவிடும்! என்றெல்லாம் மாட கூடங்களில் இருந்து மமதையை மலையென மனத்தில் வளர்த்துக் கொண்டோர் ஆரூடம் கணித்த நேரத்தில்; என் ஆரூயிர் உடன் பிறப்பே! நீயல்லவா நிமிர்ந்து நின்று சுடர்முகம் தூக்கி கோடிக்கதிரவன்கள் கூடி வந்தது போல் ஒளிபரப்பி எட்டுத் திசையும் முரசு கொட்டுக என்று முழக்கமிட்டாய்; கோடை இடிகளென! குன்றங்கள் ஒன்றோடொன்று மோதி எழுப்பிய ஒலியென!

எரிச்சல் கணை, ஏசல்பாணம், கண்டனச் சொற்கள், கடுமொழி, கடும்பார்வை, இத்தனையும் கொண்ட தீய சக்திகள், பிற்போக்கு பிறவிகள், கழகம் பிறந்த காலந்தொட்டு அதனை அழிப்பதற்கு நேரம் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றன. துரோகச் சிந்தையினர் தம் சுகவாழ்வு ஒன்றை மட்டும் முன்னுக்கு நிறுத்தி தூய நற்கழகத்தை அழித்திட தங்கள் கரங்களில் சதிக்கருவி ஏந்தவும் தயங்கவில்லை. நம்மிடம் இருந்து பிரிந்து சென்றவர்களே அதற்கு வழியும் வகுத்து கொடுத்தனர்.

துரோகத்தை தூள் செய்து பகையை புறங்கண்டு நீ தூக்கி உயர்த்தியிருக்கிற இரு வண்ணக் கொடியை காணும்பொழுதும், அந்தக் கொடியின் பட்டொளியில் இயக்க சரித்திரத்தை படிக்கும் பொழுதும் ஓரம்போகியார் எனும் ஒரு பெருங்கவிஞர் எழுதிய புறப்பாடல் ஒன்றை நான் நினைவுபடுத்திக் கொள்கிறேன்.

கவிஞர் எழுதிய புறப்பாடலில் இரண்டு நாட்டு மன்னர்கள் போரிடுகிறார்கள். ஆனால், நம் நிலையோ அப்படியல்ல. நம்மிடம் இருந்து பிரிந்து சென்றவர்களே, நமக்கு எதிரியாகி தாக்கும் நிலை.

போர் மூண்டுவிட்ட சமயத்தில் மன்னன் ஒருவன் உடனே களம் புகுமாறு வீரர்களுக்கு எல்லாம் செய்தி அனுப்புகிறான். பகை சாய்க்கும் குறியுடன் பல பகுதிகளில் இருந்தும் வீரர்கள் வந்து கூடுகின்றனர். போர் தொடங்கி விடுகிறது. அந்த போரில் கலந்து கொள்ள ஓடோடி வரும் ஒரு வீரனை மட்டும் புலவர் ஓரம்போகியாரின் விழிகள் வட்டமிடுகின்றன. அவன் யானையில் அமர்ந்தோ, புரவியில் ஏறியோ அல்லது தேர் செலுத்தியோ அந்த களத்திற்கு வரவில்லை. தன்னந்தனியனாக, நூலரி மாலையை அணிந்து கொண்டு, கையில் ஒரு வாளுடன் காலாட்படை வீரனாக களத்தில் நுழைகிறான். கடும் போரிடுகிறான்.

மானங்காக்க போராடும் அந்த தமிழ் மறவர் குல திலகத்தையே ஓரம்போகியார் உற்றுப்பார்த்துக் கொண்டு நிற்கிறார். உயர்ந்ததோர் குன்றின் உச்சிமீது ஏறி! புலவரல்லவா? எனவே குன்றேறி நின்று போர்க்கள காட்சி காணுகிறார்! அந்த மாட்சியைக் கவிதையாக வடிக்கிறார்!

அவர் உள்ளங்கவர்ந்த வீரன், எதிர்ப்படை வீரனை நோக்கி பாய்கிறான். பகைவனோ யானை மீது இருந்து போரிடுபவன். இவனோ பூமியின் தோளைத்தான் குதிரையின் முதுகென கருதிக் கொண்டு வாள் சுழற்றுகிறான்.

அந்த வாள்வீச்சு! மாரிக்கால மின்வெட்டின் வீச்சு! யானை கீழே வீழ்கிறது. யானையை வீழ்த்திய அவன் வாளும் வளைந்து கோணிவிடுகிறது.

யானையின் மீதிருந்து விழுந்த வீரன், எழுந்து வந்து எதிரியை தாக்கி அழிப்பதற்குள் வாளை நிமிர்த்தியாக வேண்டும். என்ன செய்தான் தெரியுமா? ஓரம்போகியார் உரைக்கிறார் கேள்! அந்த போர்க்களத்தில் அவன் வாளை நிமிர்த்துக் கொள்ள உடனடியாக எந்த வசதியும் கிட்டவில்லை.

எதிரியோ, எழுந்துவிட்டான்! விரைவில் அருகே நெருங்கி விடுவான்! பளிச்சென தோன்றியது ஒரு அரிய யோசனை! கோணிய வாளை எடுத்து அங்கே தன்னால் வீழ்த்தப்பட்டு கிடக்கிற யானையின் மத்தகத்தில் அழுத்தி நிமிர்த்தி கொள்கிறான்.

அவனது வளைந்து போன வாளை நிமிர்த்திக் கொண்டான் என்பதை கண்டதும் எதிரிப்படையின் வீரன் எடுக்கிறான் ஓட்டம்! புறங்காட்டி ஓடுகிற அவனைப்பார்த்த அந்த வீரன் நாணி நகைக்க தொடங்குகிறான்.

ஓரம்போகியார் சித்தரிக்கும் அந்த திறன்மிகு தீரனாகத்தான்; உன்னை - ஆம்- கழகத்தை; நான் கருதுகிறேன். கொல்ல வரும் பகையை அவன் விரட்டியது போல் தொல்லை தரும் துரோகத்தை நமது கழகம் வெற்றி கண்டு, இளநகை புரிகிறதல்லவா?

இந்த இளநகை, கையில் வேலோ, வாளோ ஏந்திப் பெற்றதல்ல! இதயத்தில் கொள்கையும், உறுதியும் ஏந்தி பெற்றதாகும்! புறநானூற்று வீரன் தன்னந்தனியாகக் களத்திற்கு வருகிறான் என்கிறார் புலவர்!

கழகமோ, கடமையெனும் கட்கமேந்தி, கண்ணியமெனும் கவசம் பூண்டு, கட்டுப்பாடெனும் கேடயம் பூண்டு, தனிமையில் விடப்பட்ட போதிலும் தளரா உறுதியுடனும், ஊக்கத்துடனும் எதிர்ப்புகளை புறங்கண்டு வெற்றி புன்னகை கொட்டுகிறது.

இடையிலுள்ள ஒரு எழுத்து அகன்றால், "வெற்றி''; "வெறி'' ஆகிவிடும்!. அதற்கு என்றுமே இடம்தராது அரசியல் பெருந்தன்மை போற்றிட வேண்டும்.

இந்தப்பண்பாட்டை நமக்கு உணர்த்தியவர்தான் நமது தலைவர் அண்ணா! அந்தத் தலைவருக்கு தலைவர்தான் பெரியார்!

அண்ணா அப்போது நமக்கு உணர்த்திய அந்தப்பண்பாட்டை அணுகளவும் பிசகிடாமல் காத்திடுவாய் எனும் நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு. இப்படி திடீரென வந்துவிட்டது திருமங்கலம் இடைத்தேர்தல்! "கொடி பறக்குதடி பாப்பா- அதை கோபமின்றி கூப்பிடடி பாப்பா!; மக்களை ஏமாற்றும் கொக்கு- அதன் மமதை அழிய வேண்டும் பாப்பா''! என்று வீதிதோறும் பாடி, விடுதலை வேட்கையை தட்டி எழுப்பிய விஸ்வநாததாசுக்கு; நாம் எழுப்பிய நினைவு மண்டபம் திருமங்கலத்திலேதான்! அவர் இசைத்த பாடல் இன்றைக்கும் பொருத்தம்தான்!

அமுதத் தமிழ் மீது கொண்டிருந்த அளவிலா பற்றால் அவ்வைக்கு அரு நெல்லிக்கனி அளித்த அற்றை நான் தடூர்த் தலைவன் அதியமானை நினைவூட்டிடும் பெயர் திருமங்கலம் அதியமானின் பெயர். அவரது துணைவியார் லதாவை கழக வேட்பாளராக களத்தில் இறக்கி இருக்கிறோம். 2006-ல் ஆட்சி பொறுப்பேற்றதற்குப் பின்னர் வந்த இடைத்தேர்தல்கள் இரண்டிலும் நமது கழகமே வாகை சூடியது. அந்த வெற்றி வரலாறு தொடர்ந்திட, இந்த இடைத் தேர்தலிலும் வாகை சூடிடுவாய்!" எ‌ன்று முத‌ல்வ‌ர் கருணாநிதி கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil