எனது தலைமையிலான அ.இ.அ.தி.மு.க ஆட்சி தமிழகத்தில் மலர்ந்தவுடன் கருணாநிதியின் குடும்பத்தினரின் அராஜகச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் நிம்மதியாக தங்களது தொழிலை தொடங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மு.க.அழகிரி குடும்பத்திற்குச் சொந்தமான ராயல் கேபிள் விஷன் நிறுவனத்தினரால் தாங்க முடியாத இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்ட கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் 1.12.2008 அன்று கருணாநிதி இல்லத்தில் நடைபெற்ற பணப் பரிமாற்ற ஒப்பந்தத்திற்குப் பிறகு சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்தினரால் மிரட்டப்படுவதாகவும், இது குறித்து முதலமைச்சரிடம் புகார் கொடுக்க 23.12.2008 அன்று அவர்கள் சென்னை வந்து கொண்டிருந்தபோது அவர்கள் அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விட்டதாகவும், அவர்களுக்கு உணவு கூட கொடுக்கப்படவில்லை என்றும் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் தெரிவிக்கின்றனர். ஆக கருணாநிதியை நம்பி அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் இன்று பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
1.12.2008 அன்று நடைபெற்ற பணப்பரிமாற்ற ஒப்பந்தத்தின்போது மாறன் சகோதரர்களிடம் மு.க.அழகிரி 800 கோடி ரூபாய் கேட்டதாகவும், இதன் அடிப்படையில் 300 கோடி ரூபாய் முன்பணம் மாறன் சகோதரர்களால் அழகிரியிடம் கொடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்ற இந்தச் சூழ்நிலையில் காசுக்காக எதையும் செய்யக் கூடிய கருணாநிதியை சந்திப்பதன் மூலம் அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கு எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை என்பது மட்டும் உறுதி.
இதே நிலைமை தான் கருணாநிதியை நம்பி கலைஞர் தொலைக்காட்சிக்கு வந்த சரத் ரெட்டிக்கும் ஏற்பட்டிருக்கிறது. 1.12.2008 அன்று கருணாநிதி குடும்பத்திற்கும், மாறன் குடும்பத்திற்கும் ஏற்பட்ட இணைப்பை அடுத்து மத்திய, மாநில அரசுகளின் அதிகாரங்களை தங்கள் கையில் எடுத்துக் கொண்ட மாறன் சகோதரர்கள், சரத் ரெட்டியின் மீதுள்ள ஆத்திரத்தில் கோபத்தில் 20.12.2008 அன்று இரவு 12 மணிக்கு அவருடைய இல்லத்திற்குச் சென்று அவரை மிரட்டியதாகவும், அவர் இல்லத்தில் விடியற்காலை 2.30 வரை இருந்ததாகவும், அன்றிரவு அவர் இல்லத்திலிருந்து பலத்த கூக்குரல் கேட்டதாகவும் இது குறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது சரத் ரெட்டியிடம் இருந்து காவல்துறையினருக்கு புகார் எதுவும் வரவில்லை என்று கூறப்பட்டதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.
தற்போது சரத் ரெட்டி எலும்பு முறிவு காரணமாக ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. காவல்துறையினரிடம் புகார் எதுவும் கொடுக்க வேண்டாம் என்றும், இதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றும் சரத்ரெட்டியின் வழக்கறிஞரிடம் கருணாநிதி தெரிவித்ததாகவும் தகவல்கள் வந்துள்ளன. கருணாநிதியை நம்பிப் போனவர்களின் கதி என்னவாகும் என்பது இதன் மூலம் வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது.
இதனையடுத்து சன் குழுமத்திலிருந்து கலைஞர் தொலைக்காட்சிக்குச் சென்ற மீதமுள்ள 250 நபர்கள் தங்களுக்கு என்ன கதி ஏற்படுமோ என்ற அச்சத்தில் உறைந்து போயிருப்பதாக செய்திகள் வருகின்றன. எனது தலைமையிலான அ.இ.அ.தி.மு.க ஆட்சி தமிழகத்தில் மலர்ந்தவுடன் கருணாநிதியின் குடும்பத்தினரின் அராஜகச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் நிம்மதியாக தங்களது தொழிலை நடத்தவும், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அனைவரும் குறைந்த கட்டணத்தில் அதிக சேனல்களை கண்டுகளிக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.