இந்திய அஞ்சல் துறையின் 'முகவரி அடையாள அட்டை' விண்ணப்பங்கள் சென்னை விமான நிலைய அஞ்சல் அலுவலகத்திலும் இன்று முதல் கிடைக்கும் என்று அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.
அஞ்சல் துறை சார்பில் அடையாள அட்டை இல்லாத பொது மக்களுக்கு 'முகவரி அடையாள அட்டை' வழங்கும் திட்டத்தை இந்திய அஞ்சல் துறை சமீபத்தில் துவக்கியிருந்தது. சென்னை நகரில் தேர்ந்தெடுக்கப்பட்ட 94 அஞ்சல் அலுவலகங்களில் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.
பொது மக்களின் பேராதரவையட்டி இந்த வசதியை மேலும் பல அஞ்சல் அலுவலகங்களுக்கு விரிவுபடுத்த இந்திய அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது.
இதன் அடிப்படையில் தற்போது சென்னை விமான நிலைய அஞ்சல் அலுவலகம், சென்னை - 600 027 அஞ்சல் அலுவலகத்திலும் இந்த வசதி இன்று முதல் அளிக்கப்படும்.
அடிக்கடி வெளியூர் அல்லது வெளிநாடு பயணம் செல்லும் பயணிகள் வசதிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகிக்கப்படும். பொது மக்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
இந்த அடையாள அட்டை பெற கட்டணமாக ரூ.250 செலுத்தி விண்ணப்பித்ததும், தபால் துறை ஆய்வாளர்கள் வந்து ஆய்வு செய்து ஒரு வாரத்தில் அட்டை வழங்கப்படும். வேறு எந்த சான்றும் தேவையில்லை. இது 3 ஆண்டு வரை செல்லும். பின்னர் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். முகவரி மாறினால் ரூ.50 செலுத்தி மாற்றிக் கொள்ளலாம்.
இந்த அடையாள அட்டையில் அந்த நபரின் பெயர், முகவரி, ரத்த பிரிவு, அடையாள தழும்புகள் உள்ளிட்ட விவரங்களுடன் போட்டோ ஒட்டப்பட்டு இருக்கும்.