ஒரு டன் கரும்புக்கு ரூ.1,600 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமரிடம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு கோரிக்கை மனு கொடுத்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தனித்தனியாக 3 கோரிக்கை மனுக்களை கொடுத்தார்.
அதில், ஒரு டன் கரும்புக்கு மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலையாக 811.80 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. இது கரும்பை உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவை விட மிகவும் குறைவானதாகும். தற்போது ஒரு டன் கரும்பை உற்பத்தி செய்வதற்கு ஆயிரத்து 600 ரூபாய் செலவாகிறது.
தமிழ்நாடு அரசு டன்னுக்கு ஆயிரத்து 50 ரூபாய் உத்தேச தொகையாக வழங்கலாம் என்று அறிவித்துள்ளது. கரும்பை வெட்டுவதற்கும், அதை சர்க்கரை ஆலைகளுக்கு கொண்டு செல்வதற்கான பயண செலவும் இதில் அடங்கும்.
இந்த மனுவுடன் கரும்பை உற்பத்தி செய்வதற்கான விலை குறித்த விவரங்களை இணைத்திருக்கிறேன். ஒரு டன் கரும்புக்கு ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் கேட்டு வருகிறார்கள்.
எனவே மத்திய அரசு 9 விழுக்காடு பிழிதிறன் கொண்ட ஒரு டன் கரும்புக்கு மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.1,600 வழங்க வேண்டும்.
தமிழகத்தில் 10 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள மரவள்ளிக்கிழங்கு மற்றும் அதில் இருந்து தயாரிக்கப்படும் ஸ்டார்ச் உற்பத்தியாளர்களுக்கான வரிவிதிப்பில் சலுகை தரவேண்டும் என்றும், சேலம் பர்ன் அன்ட் நிறுவனத்தை மத்திய அரசின் இந்திய ஸ்டீல் அத்தாரிட்டியோடு இணைத்தோ அல்லது சுயநிர்வாக நிறுவனமாக மாற்றியோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.