தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் தாக்கப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் தலைவி சோனியாகாந்திக்கு கடிதம் எழுதியிருக்கிறேன் என்று தெரிவித்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக காங்கிரசார் இதை பெரிதுபடுத்தி விட்டனர் என்றும் தங்கபாலுவும், இளங்கோவனும் அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர விரும்புகிறார்கள் என்றார்.
கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொள்ள குமரி மாவட்டம் அருமனை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், திருமங்கலம் தொகுதியில் தி.மு.க.வுக்கு விடுதலைச் சிறுத்தைகள் முழு ஆதரவு அளிக்கும் என்றும் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி என்றார்
சத்தியமூர்த்தி பவன் தாக்குதல் திட்டமிட்ட செயல் அல்ல, அது எதிர்பாராமல் நடந்த நிகழ்வு என்று கூறிய திருமாவளவன், இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் தலைவி சோனியாகாந்திக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். தமிழக முதலமைச்சரை சந்தித்து விளக்கம் அளித்துள்ளேன் என்றார்.
இந்த சம்பவத்தை தமிழக காங்கிரசார் இதை பெரிதுபடுத்தி விட்டனர் என்று குற்றம்சாற்றிய திருமாவளவன், தங்கபாலுவும், இளங்கோவனும் அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் சேர விரும்புகிறார்கள். அதற்காக எடுக்கப்பட்ட அரசியல் ரீதியான நடவடிக்கைகள்தான் விடுதலைச் சிறுத்தைகள் மீதான மோதல் என்றார்.
தமிழ் ஈழம் அமைய உலக அளவில் ஆதரவு திரட்டும் மாநாடு வருகிற 26ஆம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் இளஞ்சிறுத்தைகள் பாசறையின் தொடக்க விழாவும் நடைபெறும் என்றார் தொல்.திருமாவளவன்.