விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ள திரைப்பட இயக்குனர் சீமான், பெரியார் திராவிட கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் தங்களை பிணையில் விடுதலை செய்யுக் கோரி தாக்கல் செய்த பிணைய மனுவை ஈரோடு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி அசோகன் மனுவை தள்ளுபடி செய்ததோடு, பிணையில் விடுதலைச் செய்யக் கோரி ஈரோடு கூடுதல் நீதிமன்றத்தை அணுகுமாறும் கூறினார்.
முன்னதாக, வழக்குத் தொடர்ந்தவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், இவர்கள் இருவர் மீதும் இதே போன்ற வழக்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றும் தொடர்ந்து அவர்கள் இதே குற்றத்தில் ஈடுபடுகின்றனர் என்றும் கூறி இருவரையும் பிணையில் விடுதலை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
சீமான், கொளத்தூர் மணி ஆகிய இருவரையும் ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர் காலனி பகுதியில் கடந்த 14ஆம் தேதி இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதாக காவல்துறையினர் கைது செய்தனர். இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த தமிழ் தேச பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளர் மணியரசனையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் மூவரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பின்னர் அவர்கள் 3 பேரும் தங்களை பிணையில் விடுவிக்கக் கோரி ஈரோடு முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அவர்கள் சார்பில் வழக்கறிஞர் மோகன், நீதிபதி அசோகனிடம் மனுத்தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.