தமிழ்நாட்டில் இனி புதிய மதுக்கடைகள் எதையும் திறப்பதில்லை என்றும், தற்போது மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரம் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை என்றிருப்பதிலும், 1 மணி நேரத்தைக் குறைத்து, 2009 ஜனவரி 1ஆம் தேதி முதல் காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணி வரையில் மட்டுமே மதுக்கடைகள் செயல்படும் என்றும் முதல்வர் கருணாநிதி அறிவித்து ஆணையிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள உத்தரவில், "பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், தலைமைச் செயலகத்தில் 22.12.2008ஆம் தேதி முதல்வர் கருணாநிதியை சந்தித்து, தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார்கள்.
அவர்களது கோரிக்கையை பரிசீலித்து, படிப்படியாக மதுவிலக்கை நிறைவேற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமென முதல்வர் கருணாநிதி அப்பொழுது தெரிவித்தார்.
கடந்த இரண்டாண்டுகளில், தமிழகம் முழுவதிலும் 1,300 மதுக் கூடங்கள் (பார்) மூடப்பட்டுள்ளன. அதேபோல், 128 சில்லறை விற்பனைக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்தில் படிப்படியாக முழு மதுவிலக்கினை எய்திடும் வகையில், முதற்கட்டமாக - இனி புதிய மதுக்கடைகள் எதையும் தமிழகத்தில் திறப்பதில்லை என்றும்;
தற்போது மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரம் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை என்றிருப்பதிலும், 1 மணி நேரத்தைக் குறைத்து, 2009 ஜனவரி 1ஆம் தேதி முதல் காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணி வரையில் மட்டுமே மதுக்கடைகள் செயல்படும் என்றும் முதல்வர் கருணாநிதி அறிவித்து ஆணையிட்டுள்ளார்.
இனி அடுத்தடுத்த கட்டங்கள் பற்றி அவ்வப்போது அறிவிக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.