கிறிஸ்துமஸ் நன்னாளில் இதர மதத்தைச் சார்ந்தவர்களும் கிறிஸ்துவர்களோடு சேர்ந்து கொண்டாடுவதன் மூலம் சமுதாயத்தில் அமைதியையும், ஒற்றுமையையும், முன்னேற்றத்தையும் காண முடியும் என்று தெரிவித்துள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், இந் நன்னாளில் அனைவரும் ஒன்று இணைந்து இவ்விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டுமென்று கேட்டுக் கொண்டு தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சின்னஞ்சிறு குழந்தைகள் ஒன்றையொன்று நேசிப்பதைப்போல அன்பு காட்ட வேண்டும் என்கிறது பைபிள். ஏசுபிரான் குழந்தை வடிவில் தோன்றிய நாளே கிறிஸ்துமஸ் நாளாகும். இன்னாளில் சாந்தா கிளாஸ் என்ற கிறிஸ்துமஸ் தாத்தா குழந்தைகளுக்கு பரிசு வழங்கி மகிழ்விக்கிறார். ஒருவருக்கு ஒருவர் அன்பு பாராட்டவும் ஒருவருக்கு ஒருவர் பரிசுகள் வழங்கி இன்பவாழ்வு வாழவும் அடிகோலுவதே கிறிஸ்துமஸ் பண்டிகையின் நோக்கமாகும்.
இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே என்பது நமது தாரக மந்திரம். இவ்வுலகம் ஏழைகளுக்கே உரியது என்பது ஏசுநாதரின் வாக்கு. ஆகவே இன்னாளில் வறுமையை அகற்ற நம்மால் இயன்ற நற்பணிகளைச் செய்வோம்.
வருகின்ற 25.12.2008 வியாழக்கிழமை தே.மு.தி.க. சார்பில் காரைக்குடியில் தூய சகாய அன்னை ஆலயத்தில் காலை 8 மணியளவில் 1000 பேருக்கு கேக் வழங்கியும், காலை 10 மணியளவில் சாக்கோட்டை ஒன்றியம், அரியக்குடி, வளன்நகரிலுள்ள குழந்தை ஏசு ஆலயத்தில் 1000 பேருக்கு பிரியாணி வழங்கியும் எனது தலைமையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படும்.
இதேபோன்று நம்முடைய இயக்கத்தைச் சேர்ந்த தோழர்கள் மாவட்ட அளவில் ஆங்காங்கே உள்ள தேவாலயங்களுக்குச் சென்று கேக் வழங்கியும், உணவு வழங்கியும் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடும்படி கேட்டுக்கொள்கிறேன்.
எல்லா மக்களும் இன்புற்று வாழ வேண்டுமென்று குறிப்பாக ஏழைகள் வாழ்க்கையில் உயர்வு பெற வேண்டுமென்று பாடுபட்ட ஏசுநாதர் பிறந்த நாளாகிய இந்த நன்னாளில் இந்த பண்டிகையை இதர மதத்தைச் சார்ந்தவர்களும் கிறிஸ்துவர்களோடு சேர்ந்து கொண்டாடுவதன் மூலம் சமுதாயத்தில் அமைதியையும், ஒற்றுமையையும், முன்னேற்றத்தையும் காண முடியுமென்று நம்புகிறேன்.
இன்று இந்திய நாட்டில் ஜாதி, மத, பூசல்களால் மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை என்பது மட்டுமல்ல நடமாடக்கூட முடியவில்லை. ஆகவே, இந்நன்னாளில் அனைவரும் ஒன்று இணைந்து இவ்விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டுமென்று கேட்டுக்கொண்டு என்னு டைய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.