திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக மு.க. அழகிரிக்கு எதிரான அ.இ.அ.தி.மு.க.வின் கோரிக்கையை நிராகரிக்கக் கோரி, மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் ஆணையர் கோபாலசாமியை சந்தித்து இன்று மனு கொடுத்தனர்.
திருமங்கலம் தொகுதிக்கு ஜனவரி 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலின் போது வன்முறை ஏற்படலாம் என்று கூறி தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசாமியிடம் அ.இ.அ.தி.மு.க. சார்பில் மனு கொடுக்கப்பட்டது.
அதில், "அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 1,405 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளது. தற்போது இடைத்தேர்தல் நடக்க உள்ள திருமங்கலம் தொகுதியில் இந்த கைதிகள் வன்முறை நடத்தலாம். குற்றப் பின்னணி உள்ளவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த தடை விதிக்க வேண்டும். மு.க.அழகிரி தேர்தல் வேலை செய்ய அனுமதிக்கக் கூடாது'' என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை தலைமை தேர்தல் ஆணையம் ஆய்வுக்கு ஏற்றுக் கொண்டது.
இந்த நிலையில், மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் குப்புசாமி, வெங்கடபதி, ரகுபதி, ராதிகா செல்வி, பழனிச்சாமி, கிருஷ்ணசாமி, சுகவனம், ஜின்னா ஆகியோர் இன்று தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசாமியை சந்தித்து தி.மு.க. சார்பில் 11 பக்க கோரிக்கை மனுவைக் கொடுத்தனர்.
அதில், "அண்ணா நூற்றாண்டு விழாவின் போது, கைதிகள் விடுவிக்கப்பட்டதில் எந்த தவறும் நடக்கவில்லை. அரசியல் சட்டப்பிரிவு 432-வது பிரிவின் கீழ்தான் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இது மாநில அரசுக்குட்பட்ட அதிகாரமாகும்.
மதுரை திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலை நடத்தும் முடிவை தலைமை தேர்தல் ஆணையம்தான் எடுத்தது. இந்த தேர்தல் நடத்தப்படுவதற்கும், கைதிகள் விடுவிக்கப்பட்டதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
எனவே திருமங்கலம் தொகுதியில் கைதிகள் வன்முறையில் ஈடுபடுவார்கள் என்பதை ஏற்கக்கூடாது. கைதிகள் விடுதலை தொடர்பாக ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில அ.இ.அ.தி.மு.க. வழக்குத் தொடர்ந்தது.
அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. அந்த நகலை வைத்து தற்போது தேர்தல் ஆணையரிடம் தவறான தகவல்களை அ.இ.அ.தி.மு.க. கொடுத்துள்ளது.
அ.இ.அ.தி.மு.க. கொடுத்துள்ள மனுவில் எந்த உண்மையும் இல்லை. அடிப்படை ஆதாரமற்ற அந்த மனுவை தலைமை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும்.
மு.க.அழகிரி திருமங்கலம் தேர்தல் பணி செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் அ.இ.அ.தி.மு.க. மனுவில் கூறப்பட்டுள்ளது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் யாருக்கும் தேர்தல் பணியில் ஈடுபடலாம். அதை தடுக்க இயலாது.
குற்றப்பின்னணி இருப்பவர்களை தேர்தல் வேலை செய்ய விடக்கூடாது என்று அ.இ.அ.தி.மு.க. மனுவில் கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பார்த்தால் ஜெயலலிதாவைத் தான் முதல் நபராக பிரசாரம் செய்ய விடாமல் தடை செய்ய வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.