தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஸ்டாலின், கூட்டணி கட்சி தலைவர்கள், தொண்டர்களின் அன்புக்கட்டளையை ஏற்று, தொடர்ந்து தேர்தல் பணிக்குழுத் தலைவராக நீடிக்கப்போவதாக மு.க. அழகிரி கூறியுள்ளார்.
திருமங்கலம் இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் லதா அதியமானை அறிமுகப்படுத்தும் கூட்டத்தில் நேற்று பேசிய மு.க.அழகிரி, கண் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால் தேர்தல் பணிக்குழு தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில், இன்று உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி முன்னிலையில் தி.மு.க.வேட்பாளர் லதா அதியமான் திருமங்கலத்தில் உதவி தேர்தல் அதிகாரி சேதுராமனிடம் வேட்புமனுதாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மு.க.அழகிரி, திருமங்கலம் இடைத்தேர்தலையொட்டி நடந்த தி.மு.க. வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய நான் கண் அறுவைசிகிச்சை செய்ய வேண்டி இருப்பதால் தர்தல் பணிக்குழு தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கூறியிருந்தேன்.
ஆனால், துணை பொதுச் செயலாளர் ஸ்டாலின், கூட்டணி கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் ஆகியோரின் அன்புக்கட்டளையை ஏற்று தற்போது அறுவை சிகிச்சையை தள்ளி வைத்துவிட்ட நான் தொடர்ந்து தேர்தல் பணிக்குழுத் தலைவராக நீடிப்பேன்.
திருமங்கலம் தொகுதி வாக்காளர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளதால் வேட்பாளர் லதா அதியமான் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். இந்த இடைத்தேர்தல் மூலம் 'ஹாட்ரிக் சாதனை புரிவேன்' என்ற நம்பிக்கை உள்ளது என்று அழகிரி கூறினார்.