இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தமிழகமே ஒன்றுபட்டு நிற்கும்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு சிங்கள அரசுக்கு ஆதரவான போக்கில் நடந்து கொள்வதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் வன்மையாக கண்டித்துள்ளார்.
இது தொடர்பாக பழ.நெடுமாறன் திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும், சிறிலங்கா அரசுக்கு இந்திய அரசு இராணுவ ரீதியான உதவிகள் அளிக்கக் கூடாது ஆகிய இரு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழகத்தில் ஒன்றுபட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் போராட்டங்களைச் சீர்குலைக்கும் வகையிலும் பிரச்சினையைத் திசைத் திருப்பவும் தமிழகக் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த சிலர் செயல்பட்டு வருகின்றனர்.
தமிழகமே ஒன்றுபட்டு நிற்கும்போது இவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு சிங்கள அரசுக்கு ஆதரவான போக்கில் நடந்து கொள்வதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஈழத் தமிழர்களின் துயரைத் துடைப்பதற்காக மக்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டிருக்கக் கூடிய பல தலைவர்களைக் கைது செய்ய வேண்டுமென இவர்கள் கூக்குரல் இடுகின்றனர்.
இந்திய அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் பேச்சுரிமை, கருத்துரிமை ஆகியவற்றை பறிக்கும் வகையில் செயல்படும் இவர்களின் அநீதியான கோரிக்கைக்கு தமிழக அரசு பணிந்து பல தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்திருப்பது அப்பட்டமான ஜனநாயக உரிமைகள் மீறலாகும்.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் திரண்டு வரும் உணர்வை மேலும் மேலும் பெருக்கி அதன் மூலம் இந்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் நிர்ப்பந்தங்களை உருவாக்கி சரியான வழியில் செயல்பட வைப்பதே நமது முக்கிய நோக்கம் என்பதை உணர்ந்து நாம் செயல்பட்டாக வேண்டும்.
பிரச்சனையை திசைத் திருப்பி நமக்கு ஆத்திரமூட்டி குழப்புவதற்கு முயற்சி செய்பவர்களின் வலையில் நாம் விழுந்து விடக் கூடாது. தமிழர்களை ஒன்று திரட்டும் பணியில் முழு மூச்சுடன் செயல்படுமாறு அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.