சேலம் அங்கம்மாள் காலனியில் வசித்து வந்தவர்களை வெளியேற்றியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கும், தமிழக அரசுக்கும் தாக்கீது அனுப்ப நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அங்கம்மாள் காலனியில் வசித்து வந்த 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தூண்டுதலின் பேரில் அவருடைய ஆதரவாளர்களால் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக குடியுரிமை பாதுகாப்பு நடுவத்தின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஹரிபாபு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதியன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. அதில் அங்கம்மாள் காலனியில் இருந்து குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்தி அவர்களை அங்கு மீண்டும் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் சேலம் காவல்துறை ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து அங்கம்மாள் காலனி வாசிகள் 3.7.2008ல் சேலம் ஆணையரைச் சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தனர். ஆனால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதன் காரணமாக, வடிவேல், கோகிலா உள்பட 23 குடும்பத்தினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தனர். அவர்கள் கொடுத்த புகார் மனு மீது அமைச்சர் தலையீட்டின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தாமல் இருப்பதாக அவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தி மீண்டும் அதே இடத்தில் தங்களை குடியமர்த்த உத்தரவிட வேண்டும் என்றும், அங்கம்மாள் குடியிருப்பு வாசிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியுள்ளனர்.
இந்த மனு இன்று நீதிபதி சுகுணா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுக்கும், அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கும் இதுபற்றி தாக்கீது அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை புத்தாண்டு விடுமுறைக்குப் பின்னர் தள்ளி வைப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.