சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் கருணாநிதியை சந்தித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் தமிழ்நாட்டில் முழு மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.
கடந்த நவம்பர் மாதம் 22ஆம் தேதி ராமதாஸ் தலைமையில் மத தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர், காந்தீய சிந்தனையாளர்கள் ஆகியோர் நடத்திய கூட்டத்தில் தமிழ்நாட்டில் முழு மது விலக்கை அமல் படுத்த வேண்டும் என்றும் வருகிற தை மாதம் முதல் மதுக்கடைகளை மூட வேண்டும், இல்லையென்றால் பிப்ரவரி மாதம் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த தீர்மான நகலை முதல்வர் கருணாநிதியிடம் கொடுத்து முழு மது விலக்கை வற்புறுத்துவது என்றும் அப்போது முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்த பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட ஏராளமானோர் மது விலக்கை அமல்படுத்தக் கோரும் தீர்மானத்தையும் கொடுத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், மது எல்லாவிதமான பாவங்களுக்கும் காரணமாக அமைகிறது. மது பழக்கத்தால் இளம் விதவைகள் எண்ணிக்கை அதிகமாகிறது. சாலை விபத்துக்கள் அதிகமாகிறது என்றார்.
மாணவர்களே வகுப்பறையில் இன்று மது குடிக்கிறார்கள். நிலைமை இப்படியே போனால் இன்னும் 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அனைவரும் குடிகாரர்கள் ஆகி விடுவார்கள் என்று அச்சம் தெரிவித்தார்.
ஆகையால், தமிழ்நாட்டில் பூரண மது விலக்கை கொண்டு வந்து இந்தியாவுக்கே முன்மாதிரியான மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியை வற்புறுத்தினோம் என்று ராமதாஸ் கூறினார்.
மேலும், அவர்களது கோரிக்கைகளை கேட்ட முதல்வர் கருணாநிதி, உடனடியாக மது விலக்கை அமல்படுத்துவது சாத்தியமல்ல என்றும் படிப்படியாக மது விலக்கை கொண்டுவர ஆயத்தமாகிறோம் என்றும் கூறியதாக ராமதாஸ் தெரிவித்தார்.