விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ள திரைப்பட இயக்குனர் சீமான், கொளத்தூர் மணி ஆகியோர் தங்களை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி ஈரோடு நீதிமன்றத்தில் இன்று மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
சீமான், கொளத்தூர் மணி ஆகிய இருவரையும் ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர் காலனி பகுதியில் கடந்த 14-ஆம் தேதி இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதாக காவல்துறையினர் கைது செய்தனர். இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த தமிழ் தேச பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளர் மணியரசனையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் மூவரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பின்னர் அவர்கள் 3 பேரும் தங்களை பிணையில் விடுவிக்கக் கோரி ஈரோடு முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
அவர்கள் சார்பில் வழக்கறிஞர் மோகன், நீதிபதி அசோகனிடம் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் அரசு தரப்பு பதில் வந்ததும் விசாரணை நடைபெறும் நீதிபதி அசோகன் உத்தரவிட்டார்.