ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் சொட்டுமருந்து கொடுத்த குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக நேற்று பரவிய வதந்தியைத் தொடர்ந்து, அப்பகுதி மக்களிடையை பதற்றம் ஏற்பட்டது.நூற்றுக்கணக்கான பெற்றோர் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். சத்தியமங்கலம் நகராட்சி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் மொத்தம் 21 இடங்களில் போலியோ சொட்டுமருந்து கொடுக்கப்பட்டது.பெரிய கொடிவேரி வீரசின்னானூர் கிராமத்தில், சங்கர் என்ற நான்கு மாத குழந்தை மூளை காய்ச்சலால் இறந்தது. இந்த குழந்தைக்கும் நேற்று காலை சொட்டு மருந்து கொடுத்துள்ளனர்.சொட்டு மருந்து கொடுத்ததால்தான் அந்தக் குழந்தை இறந்ததாக் வதந்தி பரவியதையடுத்து, மக்கள் பெரும் பீதியடைந்தனர். சொட்டுமருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டதாக பொய்யான தகவல்கள் பரவின.
இதனால் ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளை எடுத்துக்கொண்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு படையெடுத்தனர்.
பல பெண்கள் அழுதவண்ணம் தங்கள் குழந்கைகளை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்.
குழந்தைகளை பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தைகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று தெரிவித்தனர். அதன் பிறகே பெற்றோர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இதனால் மாலை மூன்று மணிவரை சொட்டுமருந்து கொடுப்பது நிறுத்தப்பட்டது. மூன்று மணிக்கு பிறகும் பெற்றோர்கள் யாரும் வரவில்லை.
இதற்கிடையே ஈரோட்டில் பொய்யான தகவலைப் பரப்பியதாகக் கூறி 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.