பத்திரிகைத் துறையில் தமக்கு 70 ஆண்டுகால அனுபவம் இருப்பதாகவும், கடந்த 1942ஆம் ஆண்டில் கட்சியின் பத்திரிகையை அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரமாக தாம் இலவசமாக வழங்கியதாகவும் முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.
அப்போது ஏற்பட்ட பழக்கமே, முதல்வரான பிறகும் மக்களுக்கு இலவசமாக பல பொருட்களை வழங்கும் பழக்கம் தமக்குத் தொற்றிக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சென்னையில் நேற்று `தினமலர்' பத்திரிகையின் நிறுவனர் டி.வி. இராமசுப்பையரின் நூற்றாண்டு நினைவு அஞ்சல் தலை வெளியீட்டு விழாவில் பேசுகையில் முதல்வர் இவ்வாறு குறிப்பிட்டார்.
யார் சொன்னாலும் சொல்வது என்ன என்பதை எண்ணிப் பார்த்து, அதன்படி நடக்கும் பொறுப்பும், கடமை உணர்வும் தமக்கு உண்டு' என்று கூறிய முதலமைச்சர், ஒரு பத்திரிகையாளரின் அஞ்சல் தலையை வெளியிட மற்றொரு பத்திரிகையாளரே வந்துள்ளதாக அமைச்சர் ராசா குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டினார்.
டி.வி.இராமசுப்பையருக்கு ஜாதகம், ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை. அவற்றை அலட்சியப்படுத்துவார் என்று அவரது மனைவியே தெரிவித்துள்ளார். இதிலிருந்து டி.வி.ஆர். ஈ.வி.ஆர். (பெரியார்) ஆக இருந்துள்ளார் என்பது தெரிய வருவதாகவும் அவர் கூறினார்.
தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைக்க வேண்டும் என்று நூறாண்டுகளுக்கு முன்பே முதலில் குரல் கொடுத்தவர் சூரிய நாராயண சாஸ்திரி (பரிதிமாற் கலைஞர்) என்றும், "சாஸ்திரி'தானே குரல் எழுப்பினார், நாம் ஏன் அதனைத் தொடர வேண்டும் என்று சும்மா இருக்கவில்லை. யார் எழுப்பினாலும் அந்தக் குரல் எதற்காக ஒலித்தது என்பதை எண்ணிப் பார்த்து, அதற்காகப் பாடுபடுவதுதான் திமுக என்றும் கருணாநிதி குறிப்பிட்டார்.
பத்திரிகைகள் பாராட்டினாலும், தாக்கி எழுதினாலும், பெரியார் வாக்குப்படி அதைப் பகுத்தறிவால் எண்ணிப்பார்த்து, அதன்படி நடக்கும் பொறுப்பும், கடமை உணர்வும் தமக்கு உண்டு. தம்மைப் போன்றவர்களுக்கு இருக்கவும் வேண்டும் என்று அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா தபால் தலையை வெளியிட, முதல் அமைச்சர் கருணாநிதி அதனைப் பெற்றுக்கொண்டார்.