தமிழ் திரைப்பட இயக்குநர் சீமான் கைதுக்கும் அவரது காரை எரித்த காங்கிரஸ்காரர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, வன்முறைகள் மூலம் ஈழ ஆதரவு குரலை காங்கிரஸ் ஒடுக்கிவிட முடியாது என்றும் அது மேலும் வீறுகொண்டு எழும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை தீவில் ஈழத்தமிழ் இனத்தையே அழிக்க சிங்கள அரசு நடத்துகின்ற ராணுவத் தாக்குதலுக்கு முழு அளவில் இந்திய அரசு உதவி வருகிறது. இது மன்னிக்க முடியாத பச்சை துரோகம் ஆகும்.
1987ஆம் ஆண்டில் அன்றைய காங்கிரஸ் அரசு போபர்ஸ் பீரங்கி ஊழல் குற்றச்சாட்டில் இருந்து தப்பிப்பதற்காக, மக்கள் கவனத்தை திசை திருப்ப, இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேயோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டு, அமைதிப்படை என்ற பெயரில் இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி, தமிழர்களின் உரிமை வாழ்வை அழிக்கும் தாக்குதலில் ஈடுபட்டது.
இந்த துரோகங்களை மக்கள் மன்றத்தில் கூறியதற்காக திரைப்பட இயக்குநர் சீமான் மீது வசைபாடுகிற காட்டுக்கூச்சலை காங்கிரஸ் எழுப்பி உள்ளது. மும்பையிலே நடைபெற்ற கொடூரமான படுகொலைகளுக்குத் தளம் அமைத்து தந்த பாகிஸ்தானோடு போர் புரியவும் தயார் என்று ஓங்கிக் குரல் கொடுக்கும் இந்திய அரசு, அதே பாகிஸ்தான் கப்பல் கப்பலாக சிங்கள அரசுக்கு ஆயுதம் கொடுக்கும் நிலையில், தானும் தமிழர்களை அழிக்க ஆயுத உதவி செய்யும் அக்கிரமத்தில் ஈடுபட்டு உள்ளது.
நேற்று முன்தினம் இலங்கையில் சிங்கள ராணுவத்தளத்திற்கு சென்று, அந்த ராணுவத் தளபதிகளுக்கு யுத்தம் குறித்து பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளோடு கரம் கோர்த்துக் கொண்டு இந்திய ராணுவ அதிகாரிகளும் ஆலோசனைகளை வழங்கி உள்ள துரோகத்தில் இந்திய அரசு ஈடுபட்டு உள்ளது சகிக்க முடியாத கொடுமை ஆகும்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் கட்சியின் சில நிர்வாகிகள் ஈழத்தமிழருக்கு ஆதரவு கொடுக்கும் இயக்குநர் சீமானை அச்சுறுத்த எண்ணி, அவர் படப்பிடிப்புக்குச் சென்று இருந்த நேரத்தில், அவரது காரைத் தீயிட்டுக் கொளுத்தி உள்ளனர். இந்த அராஜகத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்த வன்முறையில் ஈடுபட்ட ரவுடிகளை, காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும். இப்படிப்பட்ட வன்முறைகளின் மூலம் ஈழ ஆதரவுக் குரலை காங்கிரஸ் ஒடுக்கிவிட முடியாது; அது மேலும் வீறுகொண்டு எழும் என எச்சரிக்கிறேன் என்று வைகோ கூறியுள்ளார்.