திருமங்கலம் தொகுதிக்கு ஜனவரி 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து, தமிழக அரசு அறிவித்துள்ள இலவச பொங்கல் பொருட்களை மதுரை மாவட்டத்தில் விநியோகம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
பொங்கல் பண்டிகை, தமிழ்ப் புத்தாண்டு ஆகியவற்றை முன்னிட்டு சர்க்கரை பொங்கல் செய்ய தேவையான பச்சரிசி, வெல்லம், பாசி பருப்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் கொண்ட 'பை' குடும்ப அட்டை வைத்திருக்கும் எல்லாருக்கும் பொங்கல் பரிசு இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா, "தேர்தல் நடத்தை விதிமுறை நடைமுறையில் உள்ளதால், மதுரை மாவட்டத்தில் அனைத்து இலவச விநியோகத்தையும் தேர்தல் ஆணையம் தடைசெய்துள்ளது" என்றார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை விநியோகத்துக்கும் மதுரையில் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தல் நடைமுறைகள் முடியும் வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
வேட்பு மனுத்தாக்கல் செய்யும் போது வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மேல் வரக்கூடாது என்று தேர்தல் ஆணையம் கண்டிப்புடன் கூறியும், நேற்று மனுத்தாக்கல் செய்த அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் இதனை மீறியுள்ளதாக அவர் கூறினார்.
இதுகுறித்து மாநில தேர்தல் அலுவலகம் தனது அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கும் என்றார்.
திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவித்தது குறித்து தேர்தல் ஆணையம், தமிழக அரசுடன் ஆலோசனை செய்யவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க மறுத்த அவர், இது மத்திய தேர்தல் ஆணையம் எடுத்த முடிவு என்றார்.
தொகுதி மறுவரையறை அமலுக்கு வருவதற்கு முன்பாக இடைத்தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் நினைத்துள்ளது என்றும் அவர் கூறினார்.
2006 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் படி தற்போது இந்த இடைத்தேர்தல் நடைபெறுவதாக குறிப்பிட்ட நரேஷ்குப்தா, 1.55 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட திருமங்கலம் தொகுதியில் அனைத்து வாக்களர்களுக்கும் போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என்றார்.