தேசிய அணு சக்தி ஆணையத் தலைவர் அனில் ககோட்கர் இன்று தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து, இந்திய நியூட்ரினோ அறிவியற்கூடத்தை தமிழகத்தில் அமைப்பதற்கான பரிந்துரையை அளித்தார்.
இந்தச் சந்திப்பின்போது மின்சாரத்துறை அமைச்சர் ஆர்க்காடு நா. வீராசாமி, தலைமைச் செயலர் கே.எஸ். திரிபாதி, எரிசக்தித்துறைச் செயலர் ஸ்மிதா நாகராஜ், தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் சி.பி. சிங், இந்திய அணு சக்தித்துறை இணைச் செயலர் முனைவர் பி.முகர்ஜி, இந்தியக் கணித அறிவியல் கழகத்தின் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் டேனியல் செல்லப்பா உள்ளிட்டோர் உடன் இருந்தனர் என்று அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
தேசிய அணு சக்தி ஆணையம், மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை ஆகியவற்றின் மூலம் முன்னோடித் திட்டமாகச் செயல்படுத்தப்படும் முக்கியமான அடிப்படை அறிவியல் திட்டம்தான் நியூட்ரினோ அறிவியற்கூடம் ஆகும் என்று அணு சக்தி ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலத்தடியில் அமையக்கூடிய இந்த ஆய்வுக்கூடம் தமிழகத்தில் மசினக்குடி வனப்பகுதியில் அமையவுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினக்குடி நகரத்தில் இருந்து ஐந்தரை கிலோ மீட்டர் தொலைவில் சிங்காரா மலையில் உள்ள குகைப்பகுதி ஆய்வுக்கூடத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2000ஆம் ஆண்டிற்கு முன்பு கொல்கத்தாவில் உள்ள சஹா அணுக் கல்வி நிறுவனத்தில் கூடிய விஞ்ஞானிகள் குழு, அணுவின் முக்கிய மூலக்கூறான நியூட்ரான் பற்றி ஆய்வு நடத்த முயன்றதை, இந்த நியூட்ரினோ ஆய்வுக்கூடம் நினைவூட்டும் என்று கருதப்படுகிறது.
இந்திய நியூட்ரினோ அறிவியற்கூடம் அமைக்கப்படும் செய்தி இயற்பியல் விஞ்ஞானிகளிடையில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எல்லாப் பொருட்களுக்கும் அடிப்படையான அணுவின் முக்கியப் பகுதி நியூட்ரான் என்றாலும், அதுகுறித்து ஆராய உலகளவில் ஒரு சில ஆய்வுக்கூடங்களே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.