பொங்கலை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு இலவச வேட்டி- சேலை வழங்கும் திட்டத்தை ஜனவரி 1ஆம் தேதி முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார் என்று கைத்தறித்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார்.
சென்னை தேனாம்பேட்டை அண்ணாசாலையில் உள்ள கோஆப்டெக்ஸ் வானவில் விற்பனை நிலையத்தில் அலங்கார துணி வகைகள் விற்பனை கண்காட்சியை இன்று திறந்து வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தாண்டு பொங்கல், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கால விற்பனை குறியீடாக 40 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ஆண்டு தோறும் ஏழை எளிய மக்களுக்கு இலவச வேட்டி- சேலை வழங்கி வருகிறது என்றும் இந்த ஆண்டு 256 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 160 லட்சம் சேலைகளும், 160 லட்சம் வேட்டிகளும் உற்பத்தி செய்ய அரசு உத்தரவிட்டது என்றார்.
அதன்படி அவை உற்பத்தி செய்யப்பட்டு கடந்த 15ஆம் தேதி முதல் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ஜனவரி 1ஆம் தேதி இலவச வேட்டி- சேலை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து மாவட்டங்களில் அவை விநியோகிக்கப்படும் என்றார்.