''
காரணமில்லாமல் களம் அமைத்துப் பேரணி நடத்தும் ஜெயலலிதா சிறுதாவூர் பிரச்சனையில் மட்டும், தன் வாய்க்குத் தானே பூட்டுப் போட்டுக் கொண்டு மவுனமாகிவிடுகிறார்'' என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 16.12.2008 அன்று "புரட்சி பாரதம்'' என்ற கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி தலைமையில் ஐயாயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்ட எழுச்சிப் பேரணியொன்று "சிறுதாவூரில்'' அமைதியான அறப்போர் ஒன்றை நடத்தி; தலித் மக்களின் நிலங்களை அபகரித்து அங்கே ஆடம்பர மாளிகை கட்டியிருப்பதாக குற்றம்சாட்டியதோடு; "இது தொடக்கம்தான்; அபகரிக்கப்பட்டுள்ள ஏழை தலித்துகளின் நிலங்களை மீட்க; எங்கள் போராட்டம் தொடரும்'' என்று எச்சரிக்கையும் செய்திருக்கிறார்கள்.
காரணமில்லாமல் தமிழகத்தில் கண்ட கண்ட ஊர்களில் களம் அமைத்துப் பேரணி நடத்திடக் கச்சை கட்டிப் புறப்படுகின்ற ஜெயலலிதா, சிறுதாவூர் பிரச்சனை என்று வந்தால் மட்டும் தன் வாய்க்குத் தானே பூட்டுப் போட்டுக் கொண்டு மவுனமாகி விடுகிறார்.
சிறுதாவூர் பிரச்சனையை முதலில் கையிலெடுத்து முரசு கொட்டுவது; ஜெகன்மூர்த்திதான் என்று பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது. இதோ; ஒருவர் எப்படி வெள்ள நிவாரணத்திற்கு, இறந்தவர்களுக்கு ஒரு லட்சம் என்பதை இரண்டு லட்சம் என்று அரசு அளித்ததற்கு தானேதான் காரணம் என்று சொல்லிக்கொள்கிறாரோ; அதேபோல தலித்து நிலங்களை சிறுதாவூர் சீமாட்டிகள் அபகரித்துக் கொண்டதை வெளிச்சம் போட்டுக் காட்டும் பூவை ஜெகன்மூர்த்தியையும் முந்திக் கொண்டு, மார்க்சிஸ்ட் கட்சியின் மதிப்புமிக்க மாநிலச் செயலாளர் தோழர் என்.வரதராஜன் இன்றைய தமிழக அரசின் முதலமைச்சரான என்னிடம் 26.7.2006 அன்றைய தினமே சிறுதாவூர் நில அபகரிப்பு பற்றியும், தலித் மக்கள் ஏமாந்து தவிப்பது பற்றியும் "மகஜராக'' எழுதித் தந்துள்ளார்கள்.
அதனால் பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்பே; அதாவது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் என்.வரதராஜன், சிறுதாவூரில் ஏழை பாழைகளான தலித் மக்களின் நிலங்களை அபகரித்துக் கொண்டிருப்பவர்கள் யார் என்பதையும், அங்கே ஆடம்பர உல்லாச மாளிகை எப்படி வந்தது என்பதையும், கண்கலங்கிடக் கலங்கிட எழுதிய மகஜராக என்னிடம் தந்து; அவர் கோரியபடி 27.7.2006 அன்றையதினம் விசாரணைக் கமிஷன் அமைத்து, விசாரணை செய்திட ஆணை பிறப்பிக்கப்பட்டது.
தோழர் வரதராஜனுக்கே பெருமை சேரும்
தோழர் வரதராஜன் அளித்த மகஜரில், குன்றின் மேலிட்ட விளக்குபோல குறிப்பிடப்படும் வாசகங்களை; உடன்பிறப்பே, உனக்கு எடுத்துக்காட்டுகிறேன். எனவே, நான் கடிதத்தின் தொடக்கத்தில் கூறியுள்ளதுபோல; இந்த சிறுதாவூர் பிரச்சனையை முதன் முதலாக எழுப்பி போர் முழக்கம் செய்யும் வாய்ப்பைப் பெற்றவர்; புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி அல்ல; என்பதற்கும் விபரீதம் நடந்து, அது மூடப்பட்டு கிடந்ததை இருட்டிலிருந்து முதலில் வெளிச்சத்திற்கு கொண்டுவந்த பெருமையே தோழர் என்.வரதராஜனுக்குத்தான் சேரும் என்பதற்கும்; வரதராஜன் 26.7.2006 அன்று தமிழக அரசிடம் அளித்த மகஜரில் குறித்துள்ள வாசகங்களே போதுமான சான்றாக விளங்குகிறது.
அது என்ன அப்படிப்பட்ட சான்று என்கிறாயா? இதோ, அவர் அன்று தமிழக அரசுக்கு அளித்த மகஜரின் விவரம்:
"இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக் குழு'' ஜுலை 26, 2006 பெறுநர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்கள், தமிழக முதலமைச்சர், தமிழ்நாடு அரசு, சென்னை.
அன்புடையீர், வணக்கம். பொருள்: காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டம், திருப்போரூர் ஒன்றியம், சிறுதாவூர் கிராம தலித் மக்கள் நிலங்கள் மோசடியாக அபகரிப்பு, பட்டா பெயர் மாற்றம், மோசடியாக செய்யப்பட்ட பத்திர பதிவு, பட்டாவை ரத்து செய்து நிலத்தை மீண்டும் தலித் மக்களுக்கு வழங்கிடவும், சிறுதாவூர் பங்களா, நில மோசடி குறித்து முழுமையான விசாரணை நடத்திட கோருதல் தொடர்பாக.
1967ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதலமைச்சரான சி.என்.அண்ணாதுரை பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய தலித் மக்கள் விவசாயம் செய்து வாழ்வதற்காக 20 குடும்பங்களுக்கு விவசாய நிலம் தலா 2.50 ஏக்கர், குடிமனைக்காக 10 சென்ட், பொது பயன்பாட்டிற்காக ஒரு ஏக்கர் என மொத்தம் 53 ஏக்கர் நிலம், பட்டா வழங்கப்பட்டது.
இந்த நிலங்களில், சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் சாகுபடி செய்து வந்தனர். தலித் மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களில் சாகுபடி செய்து வந்ததற்கு ஆதாரமாக 1988ஆம் ஆண்டு வரை வருவாய் துறை அடங்கலில் பதியப் பெற்றுள்ளது. 1992இல் தமிழக அரசின் சிறு, குறு விவசாயிகளின் அட்டை பெற்று பயன் பெற்றுள்ளனர்.
1992ஆம் ஆண்டு வாக்கில் சிறுதாவூரில் அமைந்துள்ள சொகுசு பங்களாவில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் வந்து தங்க ஆரம்பித்த பின்னர் மேற்படி நிலங்களில் இருந்து தலித் மக்கள் நிர்ப்பந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். பலர் பெயரில் போலி கிரயப் பத்திரபதிவுகளும் நடைபெற்று, முறையான விசாரணை நடைபெறாமல் பட்டா மாற்றங்களும் செய்யப்பட்டு சிறுதாவூர் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட மேற்படி நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன. கிடைத்துள்ள வருவாய்த்துறை ஆவணங்கள் அடிப்படையில் சசிகலா குடும்பத்தை சேர்ந்த பலர் பெயரில் பட்டாக்கள் மாற்றப்பட்டுள்ளன.
விசாரணை கோரியது யார்?
எனவே, சிறுதாவூர் தலித் மக்களுக்கு மீண்டும் விவசாய நிலம் கிடைத்திடவும்; போலியான பத்திரப்பதிவு, பட்டாக்களை ரத்து செய்து சிறுதாவூர் தலித் மக்களுக்கு வழங்கிடவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். போலி பத்திரப் பதிவு பட்டா மாற்றம் செய்து தலித் மக்களின் நிலங்களை மோசடி செய்தவர்கள் மீது உரிய விசாரணையும், நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டுகிறோம்.
மேலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, முதலமைச்சராக இருந்தபோது தங்கியிருந்த சிறுதாவூர் பங்களா அமைந்துள்ள இடம் அவரது தோழி சசிகலாவின் நெருங்கிய உறவினர்களான இளவரசி, சுதாகரன் பெயரில் பதிவு மற்றும் பட்டா உள்ளதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அந்த பங்களாவை சுற்றியுள்ள காம்ப்பவுண்டுக்குள் அரசு புறம்போக்கு நிலம் சுமார் 200 ஏக்கர் வளைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே ஜெயலலிதா மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையால் பதிவு செய்யப்பட்டுள்ள வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் சிறுதாவூர் பங்களாவும் குற்றப் பத்திரிகையில் சொத்தாக சேர்க்கப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேற்படி நிலங்கள் சம்பந்தமாகவும் தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்தி புறம்போக்கு மற்றும் தரிசு நிலங்களை கையகப்படுத்தி சிறுதாவூர் கிராமத்தில் வசிக்கும் நிலமற்ற இதர விவசாயக் குடும்பங்களுக்கு வழங்கிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி, தங்கள் அன்புள்ள (என்.வரதராஜன்) செயலாளர்''
எதையும் எளிதாகப் புரிந்துகொள்ளும் ஆற்றல் படைத்த இனிய உடன்பிறப்பே; இதையும் புரிந்து கொள்வாய் என நம்புகிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.