ஈரோடு மாவட்டத்தில் கடுமையான மூடுபனி
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக மீண்டும் மூடுபனி ஏற்பட்டுள்ளதால் நெற்பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் தற்போது கீழ்பவானி பாசனப்பகுதியில் இரண்டு லட்சம் ஏக்கருக்கு மேல் நெற்பயிர் நடவு செய்துள்ளனர். இந்த பயிர்கள் தற்போது அறுவடை செய்யும் தருணத்தில் உள்ளது. கடந்த மாதத்தில் ஈரோடு மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மூடுபனியால் நெற்பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனால் பல்வேறு வகையான நோய்கள் நெற்பயிருக்கு பரவியது. இதனால் விவசாயிகளுக்கு பூச்சிகொல்லி மருந்து பயன்பாடு அதிகமாக இருந்தது. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து மூடுபனி விலகியது. இதனால் பயிர்களுக்கு ஏற்பட்ட நோய்களும் விலகியது. அறுவடை தருணத்தில் நோய் நீங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக மீண்டும் கடும் மூடுபனி ஏற்பட்டுள்ளது. இதனால் அறுவடை தருணத்தில் உள்ள நெற்பயிர்கள் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.