கட்டாய ஆரம்ப கல்வி சட்டத்தை நிறைவேற்றிய மத்திய அரசுக்கும், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங்குக்கும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "மனிதர்களின் அடிப்படை உரிமையான உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் என்பன போன்றே அறிவார்ந்த கல்வியும் அடிப்படை உரிமையாகும். நமது அரசியல் சட்டத்தில் 1949 நவம்பர் 26ஆம் தேதியே நமக்கு நாமே வழங்கிக் கொண்ட நாட்டின் மூலாதாரச் சட்டமான இந்திய அரசியல் சட்டத்தில், அரசு களுக்கு "வழி காட்டும் நெறிமுறைகள்'' என்ற நான்காம் அத்தியாயப் பகுதியில் 10 முதல் 15 வயது கட்டாய இலவசக் கல்வி என்பதாக வாசகங்கள் புகுத்தப்பட்டன.
இதற்கென திருத்தச் சட்டம் கொணரவே அரை நூற்றாண்டு ஆகியுள்ளது. மிகவும் வேதனைக்குரியது. அதற்கு முன் அதில் 10 ஆண்டுக்குள் 1950 முதல் 1960 வரை என்று வாசகங்கள் கருத்தியலில் இருந்தன. அதை மாற்றித்தான் 2002 இல் 86-வது அரசியல் சட்டத்திருத்தம் வந்தது.
அரசியல் சட்டத்திருத்தம் வந்தாலும், அதனை வைத்து நேரிடையாகச் செயல்படுத்த முடியாது. சட்டப்படி இதற்கென மற்றொரு தனிச்சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றிட வேண்டும்.
அச்சட்டம் இப்போது தான் மத்திய அமைச்சர் அர்ஜுன் சிங்கின் சீரிய முயற்சி யால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தான் அதுவுங்கூட சற்று காலந்தாழ்ந்துதான் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இச்சட்டம் மூலமாக கட்டாயக்கல்வி இளந்தளிர்களுக்கு தரப்பட்டால்தான் சமூக மாற்றம் ஏற்பட சாத்தியமாகும்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசையும், அதன் ஆற்றல் மிகு மனிதவளத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங்கையும் பாராட்டுகிறோம்" என்று கி.வீரமணி கூறியுள்ளார்.