சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக எஸ்.ஜே.முகோபாத்தியா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிறப்பித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமுன்றத்தின் தலைமை நீதிபதியாக பணிபுரிந்து வந்த ஏ.கே.கங்குலி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (17ஆம் தேதி) அவர் பதவி ஏற்றுக்கொள்கிறார்.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதியாக எந்த நீதிபதியை நியமனம் செய்வது என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆகவே, தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக இருக்கும் நீதிபதி முகோபாத்தியா தற்காலிக தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பிறப்பித்துள்ளார்.
புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்படும்வரை முகோபாத்தியா தற்காலிக தலைமை நீதிபதியாக செயல்படுவார் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா மாற்றப்பட்டபோது சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்காலிக நீதிபதியாக முகோபாத்தியா செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.