பொங்கல் பண்டிகை, தமிழ்ப் புத்தாண்டு ஆகியவற்றை முன்னிட்டு சர்க்கரை பொங்கல் செய்ய தேவையான பச்சரிசி, வெல்லம், பாசி பருப்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் கொண்ட பை இலவசமாக வழங்கப்படுகிறது. குடும்ப அட்டை வைத்திருக்கும் எல்லாருக்கும் இந்த பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''பொங்கல் திருநாளை தமிழர் திருநாளாக கொண்டாடி வரும் தமிழ்நாட்டு மக்கள், இனி தமிழ்ப் புத்தாண்டு பிறந்த நாளாகவும் இணைத்து இந்நாளை இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், வாழை, மா, பலா என முக்கனித் தருக்களை நாட்டி; வண்ண வண்ணக் கோலங்களிட்டு, வரிசை விளக்குகளால் ஒளியுமிழ் இல்லங்கள் புது எழில் காட்டிட, புத்தாடை புனைந்து தமிழ் மானம், தன்மானம் போற்றிப் பாடியும் ஆடியும்; சமத்துவ உணர்வு பரப்பியும், தமிழ்ப் புத்தாண்டு இதுவெனத் துள்ளும் மகிழ்ச்சியால் அன்பை அள்ளிப் பொழிவர்'' என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.
அதையொட்டி தைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் திருநாளை தமிழ் மக்கள் சிறப்பாகவும், இனிப்பாகவும் சர்க்கரைப் பொங்கலுடன் கொண்டாட இருக்கிறார்கள்.
சர்க்கரைப் பொங்கல் தயார் செய்வதற்குத் தேவையான பச்சரிசி 500 கிராம், வெல்லம் 500 கிராம், பாசி பருப்பு 100 கிராம், முந்திரி, திராட்சை, ஏலக்காய் 20 கிராம் ஆகிய பொருட்கள், வாழ்த்துடன் கூடிய ஒரு தனிப்பையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளின் மூலம் எல்லா குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1.1.09 முதல் 14.1.09 வரை இலவசமாக வழங்கப்படும்.
குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும், நியாயவிலை கடைகளில் 1.1.09 முதல் 14.1.09 வரை எப்போது வேண்டுமானாலும் சர்க்கரைப் பொங்கலுக்கான பொருட்கள் அடங்கிய பை ஒன்றை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.