தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி சர்க்கரை பொங்கல் செய்வதற்குத் தேவையான பொருட்களை இலவசமாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு சர்க்கரை பொங்கல் தயார் செய்வதற்கு தேவையான அனைத்து பொருட்களும், தமிழ்நாட்டில் உள்ள எல்லா நியாயவிலை அட்டைதாரர்களுக்கும், ஜனவரி 1ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை இலவசமாக வழங்கப்படும். இதனை எப்போது வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சர்க்கரைப் பொங்கலுக்குத் தேவையான பச்சரிசி, வெல்லம் தலா 500 கிராம், பயறு 100 கிராம் முந்திரிப் பருப்பு, உலர்ந்த திராட்சை, ஏலக்காய் 20 கிராமும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் அனைத்துத் தரப்பினரும், தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் திருநாளை விழா எடுத்துச் சிறபபாகக் கொண்டாடுவதை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரரகளுக்கு, சர்க்கரைப் பொங்கல் தயார் செய்வதற்குத் தேவையான பொருள்களை அரசின் சார்பில் இலவசமாக வழங்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியையும், தமிழக அரசையும் கேட்டுக்கொள்வதாக தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.