மதுரை 'தினகரன்' பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக, மத்திய புலனாய்வுக் கழக (சி.பி.ஐ.) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மு.க. அழகிரி பெயரை குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி கே. மோகன் ராம் கூறுகையில், இந்த மனு இங்கு விசாரணைக்கு ஏற்புடையது அல்ல என்றும் இந்த வழக்குத் தொடர்பாக மனுதாரர் உயர் நீதிமன்ற மதுரை கிளையை அணுக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில், மத்திய புலனாய்வுக் கழக சிறப்பு வழக்கறிஞர் சந்திரசேகரன் ஆஜராகி வாதிடுகையில், இந்த வழக்கில் அழகிரியின் பெயரைச் சேர்க்கவும், அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் எந்தவித முகாந்திரமும் இல்லை என்று கூறினார்.
கடந்த 2007ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் தேதி தினகரன் பத்திரிகையில் வெளியான கருத்துக் கணிப்பைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த ஒரு கும்பல் அப்பத்திரிகையின் மதுரை அலுவலகதுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதோடு, தீ வைத்தும் கொளுத்தினர்.
இந்த தாக்குதலில் அந்த அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த கோபிநாத், வினோத்குமார், முத்துராமலிங்கம் ஆகிய 3 பேர் பலியானார்கள்.
இது தொடர்பாக தாக்குதலில் பலியான கோபிநாத் என்பவரின் தாயார் திலகவள்ளி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில் மதுரையில் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கில், முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி, மதுரை மேயர் தேன்மொழி கோபிநாதன் உள்ளிட்ட 10 பேரை சேர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார்.