சென்னை அம்பத்தூரில் வீடுகள் இடிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடு கட்டிக்கொள்ள தமிழக அரசு தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடு தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் என்.வரதராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்பத்தூர் ஏரிக்கு அருகில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. திருவேற்காடு, கொரட்டூர் ஏரிப்பகுதியில் வசிக்கும் மக்களும் இதனால் அச்சப்படும் நிலை உள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் இது தொடர்பாக முதலமைச்சர் ஏற்கனவே அளித்துள்ள உறுதிமொழிகளை செயல்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நீதிபதிகள் சந்துரு, மிஸ்ரா குறிப்பிட்டது போல பயன்படாத ஏரிகளை நில வகையாக மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். ஏரியின் உபரி நீர் வெளியேறும் பகுதிகளில் முறையான வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
அம்பத்தூர் பகுதியில் மற்ற இடங்களில் இடிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அருகிலேயே உரிய இடத்தை கொடுப்பதுடன் அதற்கான இலவச பட்டாவையும் அரசு வழங்க வேண்டும்.
சிறுக சிறுக சேமித்து கட்டப்பட்ட தங்கள் வீடுகள் இடிக்கப்பட்டதால் அம்பத்தூரில் பொதுமக்கள் துயருறும் நிலைமை மிகுந்த வேதனை அளிக்கக் கூடியதாக உள்ளது. இக் குடும்பங்களுக்கு வீடு கட்டிக்கொள்ள தமிழக அரசு குறைந்தது தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என வரதராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.