கட்சித்தாவல் தடை சட்டப்படி ஒரு கட்சியில் எம்.எல்.ஏ. ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் வேறு ஒரு கட்சியில் உறுப்பினர் ஆனால் அவரது பதவியை பறிக்கலாம் என்று விதி உள்ளது என்றும் இதன்படி செல்வபெருந்தகை எம்.எல்.ஏ.வை பதவியை விட்டு நீக்க வேண்டும் என்றும் அ.இ.அதிமுக, சட்டப்பேரவை தலைவரிடம் மனு கொடுத்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தம்பிதுரை இன்று தமிழக சட்டப்பேரவை தலைவர் ஆவுடையப்பனிடம் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. அக்கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவராவார். அரசியல் சட்டத்தின் 10வது அட்டவணையின் கீழ் கட்சித்தாவல் அடிப்படையில் அவர், எம்.எல்.ஏ. பதவியிலிருந்து தகுதி நீக்கத்துக்கு உரியவர் ஆவார்.
11.11.2008ஆம் தேதியிலிருந்து அவர் கட்சியிலிருந்து தாமாகவே விலகி சட்டமன்றத்திற்கு வெளியே கட்சிக்கு எதிராக பேசியும், செயல்பட்டும் வருவதால் அவர் எம்.எல்.ஏ. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டியவராவார். அவர் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து தாமாகவே முன்வந்து விலகிவிட்டார் என்பது பத்திரிகைகளிலும் செய்திகளாக வெளிவந்துள்ளன.
ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், ஈழத்தமிழர் பிரச்சனையில் மத்திய அரசை கண்டித்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டதாகவும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதிதான் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்று தான் கருதுவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
செல்வப்பெருந்தகை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகி பகுஜன்சமாஜ் கட்சியில் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முன்னிலையில் 11.11.2008ஆம் தேதியன்று இணைந்தார்.
2006ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட செல்வப்பெருந்தகை தொடர்ந்து அக்கட்சியில் நீடிக்கவில்லை. எனவே இதுபோன்ற காரணங்களால் அரசியல் சட்டத்தின் 10வது அட்டவணையின் கீழ் செல்வப்பெருந்தகையை எம்.எல்.ஏ. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.