இலங்கையில் போரை நிறுத்துவதைப் பற்றி வலியுறுத்துவதற்காகவும், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யவும் இந்திய அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை உடனடியாக இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்ட்டுள்ளது.
வி.பி.சிங்குக்கு இரங்கல்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று நடந்த தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மறைவு நமது நாட்டிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு இக்கூட்டம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
மும்பை மாநகரில் தீவிரவாதிகள், பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டவர்களுக்கு இந்த உயர்நிலை செயல்திட்டக் குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
பயங்கரவாதத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்
தீவிரவாத, பயங்கரவாத நடவடிக்கைகளை முளையிலேயே கிள்ளி எறிவதற்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.
இலங்கையிலே நிலைமைகள் சீர்படுவதைப்பற்றிக் கவனிக்கவும், போரை நிறுத்துவதைப் பற்றி வலியுறுத்துவதற்காகவும், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யவும் இந்திய அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை உடனடியாக இலங்கைக்கு அனுப்ப வேண்டுமென இந்தியப் பிரதமரையும், மத்திய அரசையும் இந்த உயர்நிலை செயல்திட்டக்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தமிழகத்தில் புயல், பெருமழை, வெள்ளம் காரணமாக 215 பேர் உயிரிழந்துள்ளார்கள். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு உயர்நிலை செயல்திட்டக் குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
மத்திய அரசு வழங்கவுள்ள நிவாரண நிதி ஒதுக்கீட்டை எதிர்பார்த்து, வெள்ள நிவாரணப் பணிகளுக்கென உடனடியாக 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, நிவாரணப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் துரிதமாக மேற்கொண்டதுடன், காலக்கெடுவைத் தவிர்த்து தொடர்ந்து நிவாரண உதவிகளைப் பொதுமக்களுக்கு வழங்கி வரும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கும், தமிழக அரசுக்கும், நிவாரணப் பணிகளை மேற் கொண்டு வரும் அரசு அலுவலர்களுக்கும் இந்த உயர்நிலை செயல்திட்டக்குழு தனது பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறது.
சோனியாவுக்கு பாராட்டு
டெல்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் சோனியா காந்தி சீரிய தலைமையிலான அகில இந்திய காங்கிரஸ் கட்சி மூன்று மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதோடு; இரண்டு மாநிலங்களில், ஏற்கனவே இருந்த எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருப்பதற்கு உயர்நிலை செயல்திட்டக் குழு பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
சர்க்கரை பொங்கலுக்கு இலவச பொருட்கள்
தமிழகத்தில் அனைத்துத் தரப்பினரும், தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் திருநாளை விழா எடுத்துச் சிறப்பாகக் கொண்டாடுவதை முன்னிட்டு, குடும்ப அட்டை தாரர்களுக்கு, சர்க்கரைப் பொங்கல் தயார் செய்வதற்குத் தேவையான பொருள்களை அரசின் சார்பில் இலவசமாக வழங்க வேண்டும் என்று முதலமைச்சரையும், தமிழக அரசையும் உயர்நிலை செயல்திட்டக் குழு அன்புடன் கேட்டுக் கொள்கிறது.