மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு அடுத்த மாதம் 9ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் லதா அதியமான் போட்டியிடுவார் என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடைபெற்ற கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கருணாநிதி இதனைத் தெரிவித்தார்.
தி.மு.க உயர் நிலை செயல்திட்டக் குழுவின் கூட்டம் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், மு.க.ஸ்டாலின், பொன்முடி உட்பட கட்சியின் முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் கருணாநிதி, திருமங்கலம் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் லதா அதியமான் போட்டியிடுவார் என்று கூறினார்.
இதனிடையே, திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று பா.ஜ.க. அறிவித்துள்ளது.
திருமங்கலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த வீர. இளவரசன் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தொகுதியில் அ.இ.அ.தி.மு.க போட்டியிடும் என்றும், அக்கட்சிக்கு கூட்டணிக் கட்சியான ம.தி.மு.க ஆதரவு அளிக்கும் என்றும் அதன் பொதுச் செயலாளர் வைகோ ஏற்கனவே அறிவித்துள்ளார்.