சென்னை உள்பட ஐந்து ரயில் நிலையங்களுக்கு இன்று அதிகாலை வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். விடிய விடிய நடந்த சோதனையில் இதுவரை வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை, இருந்தாலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் உள்ள க்யூ பிரிவு காவல்துறை தலைமை ஆய்வாளரின் (ஐ.ஜி.) செல்பேசிக்கு இன்று அதிகாலை 2.30 மணிக்கு ஒரு குறுந்தகவல் சேவை (எஸ்.எம்.எஸ்.) வந்தது.
அதில், சென்னை எழும்பூர், தாம்பரம், கோவை, மதுரை, திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் இன்று காலை 9.30 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து அவர், உடனடியாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன், ரயில்வே காவல்துறை தலைமை ஆய்வாளர் (ஐ.ஜி.) உமாகணபதி சாஸ்திரி, காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
இதனைத்தொடர்ந்து சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டனர். உடனடியாக பயணிகளின் பொருட்கள் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை விடிய விடிய நடந்தது.
இதேபோல மதுரை, திருச்சி, கோவை ரயில் நிலையங்களிலும் காவல்துறையினர் வெடிகுண்டு சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
குறுந்தகவல் சேவை மூலம் மிரட்டல் அனுப்பிய வாலிபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.