கடந்தாண்டு சென்னை சட்டக்கல்லூரி விடுதியில் மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலின்போது கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்கக் கோரி காவல்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் 21 மாணவர்கள் முன் பிணை கேட்டு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
2007ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி அன்று சட்டக்கல்லூரி மாணவர் விடுதியில் இரு மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலின் போது காவல்துறை உதவி ஆணையர் ராஜாமணி தாக்கப்பட்டார். இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 10க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு முன்பிணை வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் வழக்கறிஞர் மாரிதாஸ் உள்பட 21 மாணவர்கள் முன் பிணை கேட்டு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், ''காவல்துறையினரை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் நடந்து ஓராண்டு ஆகிவிட்டது. இந்தநிலையில் காவல்துறையினர் கைது நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். சட்டக்கல்லூரியில் நடந்த நிகழ்வுக்கும், மாணவர் விடுதியில் நடந்த நிகழ்வுக்கும் எங்களுக்கு தொடர்பில்லை.
ஏற்கனவே இது தொடர்பான வழக்கில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் முன்பிணை பெற்றுள்ளனர். இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் எங்களுடைய பெயர்கள் இல்லை. ஆனாலும் பழிவாங்கும் நடவடிக்கையாக காவல்துறையினர் எங்களை கைது செய்யக் கூடும் என கருதுவதால் முன்பிணை வழங்க கோருகிறோம்'' என்று மனுவில் கூறியுள்ளனர்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.