வியட்நாமில் நடந்த உலக சதுரங்க போட்டியில் கலந்து கொள்வதற்காக பணஉதவி வழங்கிய அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து நாமக்கல் மாணவி கடிதம் எழுதியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம், படைவீடு கிராமத்தை சேர்ந்த மாணவி பி.வி.நந்திதா, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், வியட்நாமில் நடந்த உலக சதுரங்க போட்டியில் கலந்து கொள்வதற்காக பயணச் செலவிற்காக தங்களிடம் விண்ணப்பித்திருந்தேன். விண்ணப்பித்த 3 நாட்களில் எங்களுக்கு பேருதவியாக 80 ஆயிரம் ரூபாய் வரைவு காசோலை ( டி.டி.) கொடுத்தும் ஆசீர்வாதம் செய்தும், வாழ்த்து கூறியும் வியட்நாம் நாட்டிற்கு அனுப்பிவைத்தார்கள்.
அம்மாவின் ஆசியுடன் நான் சிறப்பாக விளையாடி 12 வயதுக்கு உட்பட்ட உலக இளைஞர் சதுரங்க போட்டியில் தனி நபர் பிரிவில் 10வது இடமும், 12 வயதுக்கு உட்பட்ட குழு போட்டியில் தங்கப்பதக்கமும் பெற்றேன். எனக்கு பேருதவியும், ஆசீர்வாதமும் வழங்கியதற்கு என்றென்றும் நன்றிக் கடன் பெற்றுள்ளேன்.
மேலும், வரும் போட்டிகளில் அம்மாவின் ஆசியுடன் நன்றாக விளையாடி வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கடிதத்தில் மாணவி நந்திதா கூறியுள்ளார்.