திருமங்கலம் இடைத்தேர்தல் தே.மு.தி.க.வுக்கு திருப்புமுனையை ஏற்படும் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் இடைத்தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த 40க்கும் மேற்பட்டோரிடம் கட்சித் தலைவர் விஜயகாந்த் இன்று நேர்காணல் நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், அ.இ.அ.தி.மு.க. தொடங்கப்பட்டபோது எம்.ஜி.ஆருக்கு திண்டுக்கல் தொகுதி இடைத்தேர்தல் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதுபோல திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் தே.மு.தி.க.வுக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றார்.
தற்போதைய இடைத்தேர்தல் போல் பொது தேர்தலும் திடீரென வர வாய்ப்புள்ளது என்று தெரிவித்த விஜயகாந்த், இதற்கு எப்போது வாய்ப்பு உள்ளது என்பது பற்றி நான் ஜோதிடம் சொல்ல முடியாது. 'திடீர்' பொது தேர்தல் வருவது நாட்டு மக்களுக்கு நல்லது இல்லை. ஆனாலும் ஆட்சிக்கு முடிவு கட்ட விரைவில் பொது தேர்தல் வந்தால் வரவேற்போம் என்றார்.
மேலும், திருமங்கலம் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளரை விரைவில் அறிவிப்போம் என்றார்.