திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்தது!
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி
ஈரோடு மாவட்டம் பண்ணாரியை அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையில், வளைவில் லாரி கவிழ்ந்ததால், அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் சுமார் 12 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடல்மட்டத்தில் இருந்து ஆயிரத்து 105 மீட்டர் உயரம் கொண்டது திம்பம் மலைப்பகுதி. இந்த வழியாக பெங்களூர், மைசூர், கொள்ளேகால், சாம்ராஜ்நகர் ஆகிய இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அன்றாடம் ஆயிரக்கணக்கான லாரிகள் மூலம் சரக்கு போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது.
இந்த லாரிகள் அளவுக்கு அதிகமான பாரம் ஏற்றிவருவதால் கொண்டை ஊசி வளைவுகளில் திரும்ப முடியாமல் கவிழ்ந்து விபத்து ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் இருந்து ஈரோட்டிற்கு நெல் உமி ஏற்றிக் கொண்டு நேற்றிர ஒரு லாரி வந்தது. இந்த லாரி திம்பம் மலைப்பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவு ஒன்றில் திரும்ப முடியாமல் கவிழ்ந்தது.
இரவு எட்டு மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டது.௦ இதனால் அந்த வழியில் வேறு எந்த வாகனங்களும் செல்ல முடியாமல் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
விபத்துக்குள்ளான லாரி 10 மணி நேரத்திற்குப் பிறகே அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் பேருந்தில் வந்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.